இனிப்பு,காரம்,புளிப்புடன் பச்சைப் பயறும் சேர்ந்திருப்பதால் இந்தப் பச்சடியின் சுவை சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே!
இங்கு எப்போதும் பழ மாங்காய் மாதிரியேதான் கிடைக்கும். ஒருசில சமயங்களில் மட்டும் நம்ம ஊரில் உள்ளது மாதிரி நல்ல காய் மாங்காவாகக் கிடைக்கும். இவை சாம்பார், fish & dry fish குழம்பு, பச்சடி போன்றவை செய்ய நன்றாக இருக்கும். இப்போது இந்த மாங்காய்கள் வந்துகொண்டிருப்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமே !!
தேவையானவை:
மாங்காய்_ 1
பச்சைப் பயறு_ 1/4 கப்
பெருங்காயம்_துளிக்கும் குறைவாக
வெல்லம்_ ஒரு கப்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_துளியளவு
உப்பு_துளியளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
செய்முறை:
மாங்காயைக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சைபயறுடன் மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து பயறு வேகுமளவு தண்ணீர் ஊற்றி குழையாமல், மலர வேக வைக்கவும்.
பயறு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கிண்டிவிட்டு மாங்காய் வேகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது கரையும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.
வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு,மண் இல்லாமல் வடிகட்டி வெந்த மாங்காய் பருப்புடன் சேர்த்துக் கிண்டிவிட்டு எல்லாம் சேர்ந்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி, கடுகு,உளுந்து தாளித்துக்கொட்டி கிளறி விடவும்.
இப்போது இனிப்பு,புளிப்பு, காரம் கலந்த மாங்காய் பச்சடி சாப்பிடத் தயார்.