ஒவ்வொரு சாம்பாருக்கும் ஒவ்வொரு சுவை உண்டு. அப்படித்தான் இந்த வெண்டைக்காய் சாம்பாரும். இதன் மணமும், சுவையும் அலாதியாக இருக்கும். பிஞ்சு வெண்டைக்காயாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், பச்சையாக சாப்பிடவும்தான்.
வேண்டியவைகள்:
துவரம்பருப்பு _ 1/4 கப் (இரண்டு பேர் என்பதால் குறைத்துப் போட்டுள்ளேன்)
வெண்டைக்காய் _ சுமார் 10
சின்ன வெங்காயம் _ 2 ( ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரி கிடைக்கும். சில சமயங்களில் பெரிய வெங்காயம் அளவிலேயே இருக்கும். )
தக்காளி _ 1
புளி _ புளியங்கொட்டை அளவுதான் (கரைத்து சேர்க்காமல் அப்படியே எடுத்து சாம்பாரில் போட்டு, சாம்பார் ரெடியானதும் புளியை எடுத்துவிடுவேன்)
மிளகாய்த்தூள் _ 2 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)
மஞ்சள்தூள்
சுவைக்காகத் தேங்காய்ப் பூ கொஞ்சம். இல்லையென்றாலும் பரவாயில்லை
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு
தாளிக்க வேண்டியவை :
எண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பை குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு பருப்பு வேகுமளவு தண்ணீர் விட்டு அதில் மஞ்சள்தூள் சிறிது, பூண்டுப்பல் இரண்டு, இரண்டுமூன்று சொட்டுகள் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு பருப்பை மலர வேகவைக்கவும்.
பருப்பு வேகுமுன் சில வேலைகளை முடித்துவைப்போம்.
வெண்டைக்காயைக் கழுவிக்கொண்டு, நேரமிருந்தால் பேப்பர் டவலால் துடைத்தும் வைக்கலாம். அரியும்போது தண்ணீர் துளிகளால் ஏற்படும் வழவழப்பு இல்லாமல் இருக்கும்.
அதேபோல் வெங்காயம், தக்காளி இவற்றையும் கழுவிவிட்டு தேவையான அளவில் அரிந்துகொள்ளவும்.
அடுப்பில் குழம்புக்கான பாத்திரத்தை ஏற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு, வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய் என ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் பருப்பைக் கடைந்து ஊற்றி தேவையான தண்ணீரையும் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், புளி, உப்பு இவற்றையெல்லாம் சேர்த்து காரம், உப்பு சரியாக இருக்கிறதா என சுவை பார்த்து, வேண்டுமானல் இன்னும் கொஞ்சம் சேர்த்தும், அதிகமானால் ? …… சேர்க்கும்போதே கொஞ்சம் குறைவாக சேர்ப்பது நல்லது.
இப்போது மூடிவைத்து நன்றாகக் கொதித்து சாம்பார் வாசனை கமகம என வந்ததும் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி தழையைக் கிள்ளிப்போட்டும் இறக்கிவிடலாம்.
இப்போது வெண்டைக்காய் சாம்பார் சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றுக்கும் தயார்.