வெங்காயத் தாள் சாம்பார்/Green onion sambar/Spring onion sambar

sambar

வெங்காயத் தாள் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் சீஸனில் மட்டுமே வரும்.கீழே படத்திலுள்ளதுபோல் இரண்டு விதமாகக் கிடைக்கும்.மெல்லியதாக,புல் மாதிரியான தாள், இது மிகவும் பிடிக்கும்.இது இல்லை என்றால் மட்டுமே பெரிய தாள் வாங்குவேன்.வெங்காயத் தாளை சாதாரண வெங்காயம் மாதிரியே சாம்பார்,பொரியல்,கூட்டு,குருமா என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.

சாம்பார் வைக்கும்போது மட்டும் புளி சேர்க்காமலும்,தாளிப்பில் சிறிது பெருஞ்சீரகமும் சேர்த்தால் சூப்பராக இருக்கும்.

green onion green onion

தேவையானவை:

துவரம் பருப்பு_1/4 கப்
வெங்காயத் தாள்_1/2 கட்டு
சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு
தக்காளி_1
பச்சை மிளகாய்_1
பூண்டுப்பல்_2
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன் (போட மறந்தாச்சு)
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
வெந்தயம்_நான்கைந்து (வாசனைக்கு)
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,2 பூண்டிதழ் சேர்த்து மலர வேகவைக்கவும்.

வெங்காயத் தாளின் வேரை மட்டும் நறுக்கித் தள்ளிவிட்டு,மீதமுள்ள பகுதியைக் கழுவிவிட்டு,விருப்பமான நீளத்தில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளியைப் பொடியாக‌வும்.பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.

குழம்பு வைக்கப்போகும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி,வெங்காயத் தாள் என அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பருப்பைக் கடைந்து ஊற்றவும்.திட்டமாகத் தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கொதிக்க விட‌வும்.

நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.மற்ற சாம்பார்போல் நீண்ட நேரம் கொதிக்கத் தேவையில்லை.

இப்போது நல்ல சுவையான‌ சாம்பார் ரெடி.இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.இட்லி,தோசையுடனும் பொருத்தமாக இருக்கும்.

சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 13 Comments »