வேர்க்கடலை சாதம் / peanut rice

 

20160426_124608_Fotor

அந்தந்த ஊர் பக்கம் விளையும் பொருட்களைக்கொண்டுதானே அவ்வூர் சமையலும் இருக்கும். அப்படித்தான் எங்கள் ஊர் பக்கம் வேர்க்கடலை அதிகமாக விளையும். அதனால் இந்த ‘மல்லாட்டை சோறு’ ரொம்பவே ஃபேமஸ். இதை எப்போதாவது ஒருமுறை செய்வ‌தால் உறவு & தெரிந்தவர் என பங்கு போகும். ஒரு பெரிய பானையில் எங்க வீட்டு chief chef(ஆயா) தான் செய்வாங்க. கெட்டியா இருக்கும். செய்த மறு நாள்தான் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. ஏனோ அப்போது நான் சாப்பிட மாட்டேன். இப்போ ஆசையா இருக்கு  அவங்க செஞ்சி நாம சாப்பிடணும்போல.

என்னென்ன போட்டு செய்வாங்க என்பது அப்போதே தெரியும். ஆனால் அளவுகள் எல்லாம் தெரியாது. அவங்களுமே அரிசியை மட்டும் அளந்துகொண்டு மற்ற பொருட்களை கண்ணாலேயே அளந்துப்பாங்க‌. நல்லவேளை என் அம்மாவிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டு எப்போதாவது செய்து அவர்களை எல்லாம் நினைத்துக்கொண்டே சாப்பிடுகிறேன் 😦

இதெல்லாம் முன்பொரு காலத்தில். இப்போதோ வேலைப்பளு & ஆள்கூலி இவற்றினால் வேர்க்கடலை விளைச்சல் ஏறக்குறைய இல்லாமலே போனது. இந்த சமையலும் காணாமலே போனது.

20150918_142039

இந்த சாதத்தை பச்சரிசியில் செய்வாங்க. நான் தினையில் செஞ்சிருக்கேன். உங்க விருப்பம்போல் எல்லா தானியத்திலும் செய்ய‌லாம்.

தேவையானவை :

தினை : ஒரு கப்
புளி _ கோலி அளவு
வறுத்த வேர்க்கடலை _ 1/2 கப் (இன்னும் அதிகமாகப் போட்டாலும் நன்றாகவே இருக்கும். )
வெறும் வாணலில் வறுத்த‌ காய்ந்த மிளகாய் _ 1 (காரத்திற்கேற்ப)
உப்பு _ சுவைக்கேற்ப‌

செய்முறை :

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, ஊறியதும் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பங்கு தினைக்கு மூன்று கப்புகள் தண்ணீர் வேண்டும். இது எங்க ஊர் அடுப்புக்கு. Gas அடுப்பாக‌ இருந்தால் கூடுதலாக சேர்க்க வேண்டி வரும். புளித்தண்ணீருடன் மூன்று கப்புகள் இருக்குமாறு தேவையான தண்ணீரை சேர்த்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி(அரிசியில் செய்வதாக இருந்தால் ஒரு கப் தண்ணீர் கூட சேர்த்துக்கொள்ளலாம்) அடுப்பில் ஏற்றவும். விருப்பமானால் இதில் துளி மஞ்சள்தூள் சேர்க்கலாம்.

தண்ணீர் நன்றாகக் கொதித்து புளி வாசனை போக இரண்டுமூன்று நிமிடங்கள் ஆகும்.

புளி வாசனை போனதும் தினையைக் கழுவி சேர்த்து, தேவைக்கு உப்பும் போட்டு, தீயைக் குறைத்து, மூடி வேக வைக்கவும்.

தினை சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் அடி பிடிக்க சான்ஸ் உண்டு. எனவே அடிக்கடி கிண்டி விடவும்.

சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே வறுத்த வேர்க்கடலை & வறுத்த காய்ந்தமிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும்பாதியுமாக பொடித்துக்கொள்ளவும்.

பொடி மைய இருப்பதைவிட …… அங்கங்கே வேர்க்கடலை கடிபட்டால் நன்றாக இருக்கும்.

சாதம் நன்றாக வெந்து கெட்டியான‌தும் பொடித்த பொடியைப் போட்டு நன்றாகக் கிண்டி,  உப்பு & காரம் சரிபார்த்து, அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைத்தால் அப்படியே புழுங்கிவிடும்.

பிறகு எடுத்து சாப்பிட வேண்டியதுதான். எண்ணெய், தாளிப்பு இது எதுவும் இல்லாத சுவையான உணவு !

20160426_124605_Fotor

இதற்கு அவர்கள் ஏதும் தொட்டு சாப்பிட்டதாக நினைவில்லை. நான் வத்தல் அல்லது அப்பளத்துடன் சாப்பிடுவேன்.

ஒருசிலர் பொடி சேர்க்கும்போது கொஞ்சம் முருங்கைக் கீரையும் சேர்ப்பாங்க. ஆனால் அதை அன்றே காலி பண்ணிடுவாங்க. கீரை சேர்ப்பதால் ஊசிப்போயிடுமே, அதனால்தான்.

தண்ணீரின் அளவில் குழப்பம் என்றால் பின்னூட்டத்தில் கேட்போமே !

கிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 4 Comments »

முருங்கைக்கீரை பிரட்டல் / துவட்டல்

20150219_160734

சித்ரா வீட்ல கீரை வாரமோ !!

வறுத்த வேர்கடலை கையில் இருந்து, கூடவே முருங்கைக்கீரையும் இருந்துவிட்டால் நொடியில் முருங்கைக் கீரைப் பொரியல் ரெடியாயிடும்.

20150219_142217

ஃப்ரெஷ் கீரை

முன்பெல்லாம் தேடித்தேடி ஓடியதுபோக, இப்போ ஃப்ரெஷ்ஷாவே கிடைக்குது. கிடைக்கும்போது வாங்கி அனுபவிச்சிட வேண்டியதுதான்.

தேவையானவை :

20150222_144115

அளவெல்லாம் உங்கள் விருப்பம்தான்

முருங்கைக்கீரை _ இரண்டுமூன்று கிண்ணம் (எவ்வளவு கீரையாக இருந்தாலும் சமைத்த பிறகு கொஞ்சமாகிவிடும்)

வறுத்த‌ வேர்கடலை _ ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் _ 1
உப்பு _ ருசிக்கு

செய்முறை :

வேர்க்கடலையை வறுக்கும்போதே கடைசியில் மிளகாயையும் போட்டு சூடுவர‌ வறுத்துக்கொள்ளவும். அல்லது ஏற்கனவே வறுத்த வேர்கடலை இருக்குமாயின், மிளகாயை மட்டும் வெறும் வாணலில் போட்டு சூடுவர வறுத்து எடுக்கவும்.

இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு இடித்துக்கொள்ளவும். மைய இடிக்க வேண்டாம். வேர்கடலை கொஞ்சம் வாயில் கடிபடுகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.

பிறகு அடிகனமான சட்டியில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, தண்ணீர் காய்ந்ததும் அதில் கீரையைப் போட்டு வதக்கவும்.

மெல்லிய பாத்திரம் வேண்டாம், பாத்திரம் மெல்லியதாக இருந்தால் தண்ணீர் சீக்கிரமே சுண்டிவிடும், கீரையும் வேகாது.

வதக்கும்போதே சிறிது உப்பு சேர்க்கவும். கீரை வெந்து தண்ணீர் சுண்டி வந்ததும் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கிண்டுகிண்டி இறக்கவும்.

எல்லா சாதத்துடனும் சூப்பராக இருக்கும். சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் சூப்பரோ சூப்பராக இருக்கும்.

பீனட் பட்டர் & ஜெல்லி சாண்ட்விச்/Peanut butter&Jelly sandwich

sandwich

தேவையானவை:

ப்ரெட்/Bread_ஒரு நபருக்கு 2 துண்டுகள்/slices
பீனட் பட்டர்/Peanut butter_தேவைக்கு
ஸ்ட்ராபெர்ரி ஜாம்/Strawberry jam_தேவைக்கு

IMG_4799

Peanut butter ஐ செலக்ட் பண்ணும்போது க்ரீமியாக/creamy இல்லாமல் க்ரஞ்சியாக/crunchy தெரிவு செய்தால் சாப்பிடும்போது நன்றாக‌ இருக்கும்.உங்கள் விருப்பம்போல் எந்த ஜாமையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்கு brown bread ஐவிட  white bread இன்னும் சுவையாக இருக்கும்.

செய்முறை:

இரண்டு ப்ரெட் துண்டுகளை எடுத்துக்கொண்டு ஒன்றில் பீனட் பட்டரையும், மற்றொன்றில் ஸ்ட்ராபெர்ரி ஜாமையும்,

sandwich

கீழே படத்திலுள்ளதுபோல் ப்ரெட் தூண்டுகளின் மேல் முழுவதும் தடவி விட்டு,

sandwich

இரண்டையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அழுத்திவிட்டு,

sandwich

ஒரு கத்தியின் உதவியால் முக்கோண வடிவில் நறுக்கவும்.

sandwich

இப்போது இனிப்புடன் கூடிய,சுவையான ப்ரெட் சாண்ட்விச் சாப்பிடத் தயார்.பிறகென்ன,எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.

sandwich

இது அவசர டிஃபனாகவும்,பிள்ளைகளுக்கு ஸ்கூல் லன்ச்சாகக் கொடுக்கவும் உதவும்.

இதனை ஃபாயிஷாவின்   Passion on plate giveaway event ற்கு அனுப்புகிறேன்.

வேகவைத்த வேர்க்கடலை/Boiled peanuts

   

   வெண்மையாகவும்,லேசான பிங்க் நிறமும் கலந்த பச்சை வேர்க்கடலை.

இந்த வாரமும் கொஞ்சம் வேர்க்கடலை வாங்கி பச்சையாக சாப்பிட்டதுபோக மீதியைத் தண்ணீரில் வேகவைத்தும் சாப்பிட்டாச்சு.இதன் செய்முறை புதியவர்களுக்கு(சமையலில்) உபயோகமாகும் என நினைத்தே பதிவிடுகிறேன்.

பச்சை வேர்க்கடலையை சுத்தம்செய்து,கழுவிவிட்டு (அந்த வேலை இங்கில்லை.வாங்கும்போதே அவ்வளவு சுத்தமாக இருக்கும்)உரிப்பதற்கு செய்வதுபோல் லேசாக அழுத்தினால் மேல் பகுதியில் சிறு கீறல் விழும்.கீறல் விழுவதால் உப்புத் தண்ணீர் உள்ளே போகவும்,சூடான நீர் உள்ளே செல்வதால் கடலையும் சீக்கிரமே வெந்துவிடும். இதேபோல் எல்லா கடலையையும் செய்துகொண்டு ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.

ஒரு 15 நிமி கழித்து ஒன்றை எடுத்து உரித்து,சாப்பிட்டுப்பார்த்து வெந்திருந்தால் எடுத்துவிடலாம்.இன்னும் வேக வேண்டுமானால் சிறிது நேரம் வேக வைத்து எடுக்கவும்.

வெந்த கடலை உப்புத்தண்ணீர் கோர்த்துக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.இதுவுமே அடுத்த நாள் சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.

இதுபோல் நிறைய வேகவைத்து தோலுட‌னே நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துகொண்டால் வருடம் முழுவதுமே சாப்பிடலாம். செய்ய ஆசைதான்.அதற்கு வேர்க்கடலை வேண்டும்,அதற்கும் மேலாக வெயிலும் வேண்டும்.

சுட்ட வேர்க்கடலை/Baked green peanuts


வேர்க்கடலையைப் பச்சையாக சாப்பிடும்போது ஒரு சுவை.அதையே வேகவைத்து சாப்பிடும்போது தனிச்சுவை.சுட்டு சாப்பிடும்போது மற்ற எல்லா சுவைகளையும் மிஞ்சிவிடும்.

விறகடுப்பில் சமையல் முடித்த பிறகு அதிலுள்ள நெருப்பில் பச்சை வேர்க்கடலையைப் போட்டு சுட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதைவிட வேர்க்கடலைச் செடியையேப் பயன்படுத்தி சுடும்போது(பாதி செடி காய்ந்து சருகாகவும் மீதி பச்சையாகவும் இருக்கும்) இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.

இங்கு லேட் சம்மரில் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டிற்கு பச்சை வேர்க்கடலை வரும்.விலை அதிகம் என்றாலும் கிடைக்கிறதே என வாங்கிவிடுவேன். வீட்டிற்கு வருவதற்குள் பாதி காலியாகிவிடும்.மீதியை வேகவைத்து சாப்பிடுவோம்.சில சமயங்களில் அவனில் வேகவைத்து சாப்பிடுவோம்.இது ஓரளவிற்கு சுட்ட வேர்க்கடலை போலவே இருக்கும்.

வேர்க்கடலை மண்,தூசு இல்லாமல் சுத்தமாகவேக் கிடைக்கும்.அதை பேக்கிங் ஷீட்டில் கொட்டி பரப்பி விட்டு அவனில் வைத்து 350 டிகிரியில் வேக (bake ) வைக்கவும்.நன்றாக வேக சுமார் ஒரு மணி நேரமாவது ஆகும்.வேகும் நேரம் வேர்க்கடலையின் அளவைப் பொறுத்து மாறும்.

இந்த ஒரு மணி நேரத்தில் இரண்டுமூன்று தடவை வேர்க்கடலையை ஒரு மரக்கரண்டியால் கிளறி விடவும்.கடைசியில் ஒன்றை உரித்து சாப்பிட்டுப்பார்த்து வெந்திருந்தால் அவனிலிருந்து எடுத்துவிடவும். இல்லையென்றால் சிறிது நேரம் கழித்து வெந்ததும் எடுக்கவும்.

சூடு ஆறியபின் உரித்து சாப்பிட வேண்டியதுதான்.வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும்.

அடுத்த வாரம் வேக வைத்த வேர்க்கடலையுடன் பார்க்கலாம்.

கிராமத்து உணவு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 6 Comments »

அவரைக்காய்&வேர்க்கடலை பொரியல்

தேவையானவை:

அவரைக்காய் நறுக்கியது_ஒரு கிண்ணம்
பச்சை வேர்க்கடலை(அ)காய்ந்த வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_இரண்டு
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு,உளுந்து,சீரகம்,கடலைப் பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

பச்சை வேர்க்கடலையானால் அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.காய்ந்தது என்றால் முதல் நாளே ஊற வைத்து,நன்றாக ஊறியதைப் பயன்படுத்த வேண்டும்.

அவரைக்காய்,வெங்காயம் இவற்றை விருப்பமான வடிவத்தில் அரிந்து கொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயத்தையும்,அடுத்து அவரைக்காய், வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக்கிளறி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.

இடையிடையே கிண்டி விடவும்.அவரை,கடலை இரண்டும் வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய்ப்பூ&கொத்துமல்லி தூவி இறக்கவும்.

வேர்க்கடலை சட்னி

தேவையானப் பொருள்கள்:

வேர்க்கடலை_1/2 கப்
தேங்காய் பத்தை_5
பச்சை மிளகாய்/காய்ந்த மிளகாய்_3
இஞ்சி_ஒரு சிறு துண்டு
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் தேங்காயின்  brown  பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு   pulse   ல் இரண்டு சுற்று சுற்றினால் பூ மாதிரி ஆகிவிடும்.அதனுடன் பச்சை மிளகாய்,இஞ்சி,வேர்க்கடலை,உப்பு சேர்த்து போதுமான‌ தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.நன்றாக மசிந்ததும் ஒரு கிண்ணத்தில் வழித்தெடுத்து,தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துக் கொட்டிக் கலக்கி வைக்கவும்.

இது இட்லி,தோசை முதலியவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

இதையே கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து துவையலாகவும் பான்படுத்தலாம்.

பச்சை மிளகாய்க்கு பதிலாக காய்ந்த மிளகாய் வைத்தும் அரைக்கலாம்.இதற்கு தேங்காய்,பொட்டுக்கடலை சட்னிக்கு வைப்பதைவிட ஒரு மிளகாய் அதிகமாக‌ வைத்தால்தான் காரம் சரியாக இருக்கும்.

வேர்க்கடலை குழம்பு

தேவை:

வறுத்த வேர்க்கடலை_1/2 கைப்பிடி
புளி_சிறு கோலிகுண்டு அளவு
மஞ்சள் தூள்_சிறிது
மிளகாய்த் தூள்_ 1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு_1/4 டீஸ்பூன்
உளுந்து_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகலள்

செய்முறை:

புளியை 1 கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.புளித்தண்ணீருடன் அரைத்த வேர்க்கடலை,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை தாளித்து, கரைத்து வைத்துள்ளதை எடுத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும்.இரண்டு கொதி வந்ததும் இறக்கி விடவும்.நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம்.இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும்.