கோதுமை & ஓட்ஸ் சப்பாத்தி

இதை கோதுமை மாவு சப்பாத்தியைப் போலவேதான் செய்ய வேண்டும். கோதுமை மாவு,ஓட்ஸ் இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு மாவாக இடித்துக்கொள்ளவும்.மாவு பிசைவது, சப்பாத்தி சுடுவது எல்லாமே சாதாரண சப்பாத்தியைப் போலவேதான்.

தேவையானப் பொருள்கள்:

கோதுமை மாவு_2 கப்
ஓட்ஸ்_2 கப்
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
தயிர்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு,அடுப்பில் வைத்து சூடானதும் நிறுத்தி விட்டு,கோதுமை மாவைக் கொட்டி,ஒரு தோசைத் திருப்பியால் நன்றாகக் கிளறவும்.எண்ணெய் மாவு முழுவதும் படுமாறு நன்றாகக் கிளற வேண்டும்.

அடுத்து ஓட்ஸ் மாவைக் கொட்டி மீண்டும் அதே போல் கிளறவும்.அடுத்து தயிர்,உப்பு சேர்த்து பிசைய வேன்டும்.அடுத்து சூடானத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து நன்றாகப் பிசைந்து ஒரு ஈரத்துணி கொண்டு மாவை மூடி வைக்கவும்.குறைந்தது அரை மணி நேரமாவது வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவிற்கு எடுத்து சிறிது எண்ணெய் தொட்டுக்கொண்டு பூரிக் கட்டையில் வைத்து விரும்பிய வடிவத்தில் உருட்டிக்கொள்ளவும்.பூரியை விட  சற்று மெல்லியதாக இருக்கட்டும்.

கல் சூடானதும் சப்பாத்தியைப் போட்டு,ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம்  திருப்பி விட்டு ஒரு ஸ்பூன் (அ)  ஒரு டிஷ்யூ பேப்பரில் சிறிது எண்ணெய் தொட்டு சப்பாத்தி முழுவதும் தேய்த்து விடவும்.இது போல் அடுத்த பக்கமும் தேய்க்க வேண்டும்.நல்ல சத்தான,சுவையான,மிருதுவான சப்பாத்தி தயார்.இவ்வாறே எல்லாவற்றையும் செய்து விருப்பமான குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.