மோர் மிளகாய்/ஊறுகாய் மிளகாய்

அதிக காரமில்லாத மிளகாயாக இருந்தால் நல்லது.காரம் விரும்புவோர் அதற்கு தகுந்தாற்போல் தேர்வு செய்துகொள்ளலாம்.

தேவையானவை:

பச்சை மிளகாய்_தேவையான அளவு (நான் போட்டதில் 46 இருந்தது).
தயிர்_மிளகாய் மூழ்குமளவு
உப்பு_தேவைக்கு

செய்முறை:

முதலில் மிளகாயைத் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து ஈரம் போக நன்றாகத் துடைத்துவிடவும்.

ஒவ்வொரு மிளகாயின் நுனிப்பகுதியிலும் கீறிவிட்டு காம்புப்பகுதியில் மிகுதியானதை நறுக்கிவிடவும்.

அடுத்து ஒரு பௌளில் போட்டு அது மூழ்கும் அளவு தயிர் சேர்த்து,சிறிது உப்பும் போட்டுக் கலக்கி மூடி இரண்டு நாட்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.

மூன்றாவது நாள் மிளகாயை மட்டும் எடுத்து ஒரு எவர்சில்வர் தட்டில் அடுக்கி வெயிலில் வைத்து காயவிடவும்.மிளகாய் வைத்திருந்த மோர் பாத்திரத்தை மூடியுடன்(மீதமான மோருடன்) வெயிலிலேயே வைக்கவும்.இரண்டு நாட்களாக தயிரில் ஊறியதால் மிளகாயின் நிறம் மாறியிருகும்.

தேவையானபோது மிளகாயைத் திருப்பிவிடவும்.நம்ம ஊர் வெயிலுக்கு அப்படியே வைத்தாலும் நன்றாகக் காய்ந்துவிடும்.

மாலையில் வெயில் போனதும் மிளகாயை அதை வைத்திருந்த மோர் பாத்திரத்திலேயே எடுத்து வைக்கவும்.

இவ்வாறே இரண்டுமூன்று நாட்களுக்குக் காய வைக்கவும்.அல்லது மிளகாயிலுள்ள நீர் முழுவதும் வற்றிக் காயும்வரை செய்யவும்.

பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது ஒரு வாணலில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிளகாய் வற்றலில் கொஞ்சம் போட்டு பொரித்தெடுத்துக்கொண்டால் தயிர்சாதம்,சாம்பார்சாதம் போன்றவற்றிற்கு அருமையான ஒரு சைட்டிஷ் ஆகும்.

மிகுதியாக இருந்தால் இட்லிப்பொடிக்கு காய்ந்த மிளகாய்க்கு பதில் மோர்மிளகாய் வைத்துப் பொடித்தாலும் நல்ல மணத்துடன்,சுவையாக இருக்கும். மோர்குழம்பிலும் போடலாம்.

7 பதில்கள் to “மோர் மிளகாய்/ஊறுகாய் மிளகாய்”

  1. chollukireen Says:

    கட்டு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள எடுத்துப் போவதற்கும் வசதியாக இருக்கும். வெயில் சக்கைப்போடு காய்கிரது போல.
    ஊறுகாய் மிளகாய் பதமா காய்ந்து விட்டது. இங்கே மழை ஸீஸன்.. . குளிர் நாளில் உபயோகப் படுத்த நிறையவே ஸ்டாக் வைக்கவும்.

    • chitrasundar5 Says:

      காமாஷிமா,

      வெயில்னா வெயில் அப்படியொரு வெயில்.அதனால் கொஞ்சம் அரிசிகூழ் வத்தலும் போட்டுவிட்டேன்.

      “குளிர் நாளில் உபயோகப் படுத்த நிறையவே ஸ்டாக் வைக்கவும்”_போட்டது ரெண்டுமூனு நாளிலேயே காலி.திரும்பவும் கொஞ்சம் அதிகமா ஊற வச்சிருக்கேன்.

      ‘இங்கே மழை ஸீஸன்’_இங்கும் கொஞ்சம் மழை பெய்தால் நன்றாகயிருக்கும்.அன்புடன் சித்ரா.

  2. Mahi Says:

    நல்லா இருக்கு மோர்மிளகாய்! thai chilly -யா யூஸ் பண்ணியிருக்கீங்க சித்ராக்கா? என்னவருக்கு மோர்மிளகாய் மிகவும் பிடிக்கும். எனக்கு தான் 2 மிளகாயை பொரிக்க எண்ணெய் காயவைகக்ணுமா என்று இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்! 😉

    போனமுறை ஊருக்கு போனபோது நிறைய எடுத்து வந்தேன். வீட்டில் அம்மா செய்த மிளகாயும் கொஞ்சம் கொண்டுவந்தேன். அது மட்டும் காலி..கடையில் வாங்கிய மோர்மிளகாய் எல்லாம் அப்படியே கிடக்கிறது. அவற்றை மீண்டும் ஒரு முறை தயிரில் ஊறப்போட்டு காயவைத்தால்தான் நல்லா இருக்கும். நீங்க வீட்டிலயே போட்டு ஜமாய்ச்சுட்டீங்க. 🙂

    • chitrasundar5 Says:

      மகி,

      இந்த மிளகாயை செடியுடனே (கீரைக்கட்டு மாதிரி)வாங்கிவந்தேன்.காரம் அந்தளவுக்கு இல்லை.

      ஊரிலிருந்து பெயருக்கு எடுத்துவருவேன்.ஆனால் இந்ததடவ‌ சாப்பிட ஆரம்பிச்சு 6 மாதத்திற்குள்ளாகவே காலிபன்னிட்டோம்.பிறகு கடையில் ஒரு பாக்கெட் வாங்கினேன்.அப்படியே இருக்கு.அவ்வளவு காரம்&உப்பு.அதனால முழுமுதல் முயற்சியா போட்டாச்சு.அதுவுமே காலி.மீண்டும் கொஞ்சம் அதிகமா போட்டிருக்கேன். வருகைக்கு நன்றி மகி.

      • Mahi Says:

        இந்த மிளகாயை செடியுடனே (கீரைக்கட்டு மாதிரி)வாங்கிவந்தேன்.//// avvvvvvvvvvvv! இதுவும் ஃபார்மர்ஸ் மார்க்கட் சரக்கு போல! என்ஸொய்…என்ஸொய்!! 😉 😉 🙂

        /கடையில் ஒரு பாக்கெட் வாங்கினேன்.அப்படியே இருக்கு.அவ்வளவு காரம்&உப்பு./ ஆமாம், அதனால் தான் அதை இன்னொரு முறை மோரில் (ready made butter milk) ஊறப்போட்டு காயவைப்பேன் சித்ராக்கா! இந்த வாரம் மோர் வாங்கிவந்து மறக்காம போட்டு காயவைக்கணும். 🙂

      • chitrasundar5 Says:

        ஆஆஆமாம்,அங்கு வாங்கிய சரக்குதான்.புதுசா கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.சீசனின் ஆரம்பத்தில் மிளகாய் இல்லாத செடியாகத்தான் வரும்.அதை வைத்து சாலட்,சூப் செய்வார்கள்போல.நான் மிளகாயுடன் செடி வரும்வரை காத்திருப்பேன்.கொஞ்ச நாளைக்கப்புறம் பழத்துடன் உள்ள செடி வரும்.அதையும் வாங்கி பழத்தைக் காயவைத்துவிடுவேன்.

        “அதை இன்னொரு முறை மோரில் ஊறப்போட்டு காயவைப்பேன்” _ ஊற வைக்க எடுத்துவச்சாச்சு.நன்றி மகி.

  3. Mahi Says:

    /வெயில் சக்கைப்போடு காய்கிரது போல./ காமாட்சிம்மா அதையேன் கேக்கறீங்க?! சும்மா போட்டு தாக்குது! 😉 🙂


Mahi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி