பொரி மாவு / Pori maavu

pori maavupori maavu

இதை செய்வது சுலபம், சுவையோ அதிகம். எவ்வளவு இனிப்பு வகைகளை சுவைத்தாலும் இதன் சுவையே தனிதான்.

எங்கம்மா ஒரு பெரிய இரும்பு வாணலை வைத்து பொரிப்பாங்க,எல்லா அரிசியும் பூ மாதிரி பொரிந்து இருக்கும். இங்கே நான் பொரித்துள்ள அரிசிகூட சரியாகப் பொரியாமல்தான் உள்ளது.

குட்டீஸ்களுக்கு கொடுக்கும்போது மாவு புரை ஏறும் என்பதால் நெய் அல்லது நல்லெண்ணெயில் பிசைந்து கொடுக்கலாம்.

இதையே மாவாக அரைக்காமல் கொஞ்சம் ரவை பதத்துடன் அரைத்து சூப்பரான அரிசி உருண்டை செய்யலாம்.

தேவையானவை:

புழுங்கல் அரிசி _ ஒரு டம்ளர் அளவிற்கு
சர்க்கரை _ தேவைக்கு
ஏலக்காய் _ 1
உப்பு _ துளிக்கும் குறைவாக (ருசியைக் கூட்டத்தான்)

செய்முறை:

ஒரு அடிகனமான  வாணலை அடுப்பில் ஏற்றி நன்றாக சூடு ஏறியதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசியைப் போட்டு தோசைத் திருப்பியின் உதவியால் விடாமல் கிண்டிவிடவும்.

சிறிது நேரத்தில் அரிசி படபடவென பொரியும்.விடாமல் கிண்டவும். இப்போது பூ மாதிரி பொரிந்து வரும்.எல்லா அரிசியும் பொரிந்ததுபோல் தெரியும்போது ஒரு அகலமானத் தட்டில் எடுத்துக்கொட்டி ஆறவிடவும்.இங்கு கொஞ்சம் ஏமாந்தால் அரிசி தீய்ந்துவிடும்.அதனால் கவனம் தேவை.

இதேபோல் தொடர்ந்து எல்லா அரிசியையும் பொரித்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.

அரிசி நன்றாக ஆறியதும் மிக்ஸியில் கொட்டி அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்,உப்பு இவற்றையும் போட்டு மைய மாவாக்கி, இனிப்பு போதுமா என சுவை பார்த்து, தேவையானால் மேலும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அரைத்து, இனிப்பு அதிகமாக இருந்தால்…கூடுதல் சந்தோஷம்தான்!!  ஒரு அகலமான தட்டில் கொட்டி மீண்டும் ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சுவைக்கலாம்.

10 பதில்கள் to “பொரி மாவு / Pori maavu”

  1. திண்டுக்கல் தனபாலன் Says:

    வீட்டில் பொட்டுக்கடலையிலும் இதே போல் செய்வார்கள்… நன்றி…

  2. மகிஅருண் Says:

    கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் எங்க வீட்டில் இதெல்லாம் செய்தது இல்லை, நான் சுவைத்ததும் இல்லை சித்ராக்கா! ஈஸீயா இருக்கும் போல..கொஞ்சமா செய்து பார்க்கிறேன்.

    • chitrasundar5 Says:

      “ஈஸீயா இருக்கும் போல”____அரிசியை வறுப்பதுதான் வேலை.மாவு அரைக்கும்போதே நல்ல வாசனை வரும்.சுவையிலும் அப்படியே.கொஞ்சமா செஞ்சு பாருங்க.

  3. ranjani135 Says:

    கார்த்திகை தீபம் வரும்போது எங்க வீட்டுல அம்மா இந்த மாதிரி அவல், நெல் இவற்றை பொரிப்பார்கள் பார்த்திருக்கிறேன்.
    நீங்கள் சொல்லியிருப்பது போல செய்து பார்க்கிறேன்.

  4. rajalakshmi Says:

    எங்கள் வீட்டில் இதை சத்து மாவு என்று சொல்வோம். சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம், தேங்காய் துருவல் எல்லாம் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசைந்து உருணடி சாப்பிடலாம்.நல்ல சுவை தான் இந்த மாவுருண்டை.

    • chitrasundar5 Says:

      ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பேராக இருக்கிறதுபோல.ஆமாங்க, இதை வெல்லம் சேர்த்தும் சாப்பிடுவாங்க.நல்ல சுவையாகத்தான் இருக்கும்.

      வருகைக்கு நன்றிங்க.

  5. Suganthi Says:

    solam kambu parupu vagai potu seyara pori mavu pati sollunga

    • chitrasundar5 Says:

      சுகந்தி,

      அரிசியில் செய்வதைத்தான் நாங்க பொரிமாவுன்னு சொல்லுவோம். பருப்பெல்லாம் சேர்த்து …… ஒருவேளை சத்துமாவு பற்றி கேக்குறீங்களோ !

      அதுக்கு அரிசி, கம்பு, கேழ்வரகு, முந்திரிபருப்பு போன்றவற்றை வெறும் வாணலில் வறுத்துக்கொண்டு ஆறவைத்து மெஷினில் கொடுத்து அரைப்பாங்க. அல்லது சேர்க்கப் போகின்ற முழு தானியத்தை முளைப்புகட்டி அது விழுந்துவிடாமல் நன்றாகக் காயவைத்து பிறகு மேற்சொன்ன மாதிரியே வறுத்து அரைக்கலாம்.


chitrasundar5 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி