கரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal

poriyal

எனக்கு இந்தக் கிழங்கின் பெயர் (Yam) தெரியாது. நல்ல நாளாப் பார்த்து நானே இந்தப் பெயரை (கரணைக் கிழங்கு) சூட்டிட்டேன் . சட்டி கரணைனு பெரியபெரிய‌ கரணைக் கிழங்கு நம்மூரில் கிடைக்கும். அதில் என்னெல்லாம் செய்வோமோ, அதாவது சாம்பார், பொரியல், புளிக்குழம்பு என எல்லாமும் இதை வைத்து செய்வேன். நல்லாவே இருக்கும்.

yam

சில சமயங்களில் மெல்லிய கிழங்குகளும், சில சமயங்களில் பெரியதாகவும் கிடைக்கும். சிறிய கிழங்கானால் முழுதாக ஒன்றும் பெரியதாக இருந்தால் தேவைக்கேற்ப நறுக்கியும் செய்வேன். மீதமுள்ள‌ நறுக்கிய கிழங்கின் வெட்டுப்பட்ட பகுதியை பேப்பர் டவலால் மூடி ஒரு ஸிப்லாக்கில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்வேன்.

இந்தக் கிழங்கு நமிக்குமா எனத் தெரியவில்லை.எதற்கும் கிழங்கை தேவையான அளவில் நறுக்கி (நான் பெரியபெரிய வட்டமாக நறுக்குவேன்) அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறு துண்டு புளி & மஞ்சள்தூள் சிறிது சேர்த்து வேக வைத்து ஆறவிட்டு மேல்தோலை உரித்துவிட்டு தேவையான வடிவத்தில் நறுக்கி பயன்படுத்துவேன்.

தேவையானவை:

வட்டமாக‌ நறுக்கிய‌ துண்டுகள் _ 2
மிளகாய்த்தூள் _ இரண்டு டீஸ்பூன்
மஞ்சள்தூள் _ சிறிது
உப்பு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு வாணலில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு கிழங்கைப்போட்டு ஒரு கிண்டுகிண்டி,அதுனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.

கிழங்கு ஏற்கனவே வெந்துவிட்டபடியால் ரொம்ப நேரம் வேகத் தேவையில்லை.மிளகாய்த்தூள் கிழங்குடன் நன்றாகக் கலந்து பச்சை வாசனை போய் நன்றாக‌ சிவந்து வந்ததும்  இறக்கிவிடவும்.இடையிடையே கிளறிவிட்டால் போதுமானது.

poriyal

இது எல்லா சாதத்துடனும் நன்றாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 12 Comments »

12 பதில்கள் to “கரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal”

  1. cheena ( சீனா ) Says:

    அன்பின் சித்ரா சுந்தர் – கருணைக்கிழங்கு பொரியல் அருமை – நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  2. ranjani135 Says:

    கருணைக் கிழங்கு வேறு சேனைக் கிழங்கு வேறு, இல்லையா? சேனைக் கிழங்கைத்தான் yam என்று சொல்வார்கள். அதை தோலுடன் வேக வைப்பதில்லை. பெரிதாக இருக்கும். இது அரிக்காது.

    கருணைக் கிழங்கை பிடி கருணை என்பார்கள் எங்கள் வீட்டில். நீங்கள் செய்திருப்பது இதைதான் என்று நினைக்கிறேன். இதை முழுதாக தோலுடன் வேக வைக்க முடியும். இது கொஞ்சம் அரிக்கும். (நமிக்கும்)

    எனக்குத் திருமணம் ஆன பின் தான் இதை சாப்பிட்டிருக்கிறேன். இப்போது இந்த ஊரில் இது கிடைப்பதில்லை. ஆனால் நீங்கள் போட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் உடனே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது.

    • chitrasundar5 Says:

      நாங்க சிறியதை ‘பிடிகருணை’னும்,பெரியதை ‘சட்டி கருணை’னும் சொல்லுவோம்.அப்படின்னா நீங்க சொல்ற சேனைக் கிழங்கைத்தான் நாங்க சட்டி கருணைனு சொல்றோம்னு நினைக்கிறேன்.ஊர்ல எங்க வீட்ல நிறைய சமைச்சிருக்காங்க‌.

      இந்தப் படத்திலிருப்பது நம்ம ஊர் கருணைக்கிழங்கோ அல்லது சேனைக்கிழங்கோ கிடையாது.வேறு பெயராகத்தான் இருக்க வேண்டும். அடுத்த தடவ வாங்கினா தெளிவான படத்தைப் போடுகிறேன்.

      எங்காவது தேடிப்பிடிச்சு வாங்கி செய்து சாப்பிடுங்க.

  3. rajisivam51 Says:

    இது சட்டி கருணை என்று நினைக்கிறேன் ! இந்தப் பொரியல் நானும் செய்வேன்.
    எனக்கு ஒரு சந்தேகம் . மைக்ரோவேவில் வேக வைக்கலாமா தினம் தினம் காய்கறிகளை.
    மைக்ரோ வேவில் சமைப்பதால் உடலுக்குத் தீமையா? தெரிந்தால் சொல்லுங்களேன்!

    • chitrasundar5 Says:

      சட்டி கருணைனா சொல்றீங்க.எனக்கு வேறு மாதிரி இருக்கு.இதை வைத்து சாம்பார்,ரோஸ்ட் எல்லாம்கூட செய்யலாம்.

      எந்த கண்டுபிடிப்பாக இருந்தாலும் முதலில் இப்படித்தானே சொல்லுவோம். காய்களில் உள்ள சத்துகள் போய்டும்னு சொல்றாங்க.தேவையானால் ரீஹீட் பண்றதுக்கு மட்டும் யூஸ் பண்ணிப்பேன்.ஒருவேளை ஊரில் இருந்திருந்தால் நேரமில்லாமல் இதில் சமைத்திருப்பேனோ என்னவோ தெரியல.

  4. மகிஅருண் Says:

    இந்தக் கிழங்கை இதுவரைக்கும் பார்த்ததில்லை சித்ராக்கா! நான் வாங்குவது இண்டியன் ஸ்டோரில் ஃப்ரோஸன் சேனைக் கிழங்கு மட்டுமே! கருணைக் கிழங்கு இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை! 🙂

    பொரியல் நல்லா இருக்கு.

    • chitrasundar5 Says:

      இங்கும் ஒரு இண்டியன் ஸ்டோர்ல மட்டும் இது கிடைக்கும்.ஆரஞ்சு கவுண்டியில இருந்தப்போ ஒரு வியட்னாமீஸ் கடைக்குப் போவோம்.அங்கு நாம் பார்த்திராத பெரியபெரிய என்னென்னமோ கிழங்குகள் எல்லாம் இருக்கும்.

      பிடி கருணையை வைத்து புளிக்குழம்பு செய்வாங்க.பெரிய கருணையை வைத்து சாம்பார்,பொரியல் எல்லாம் செய்வாங்க.அவை கிடைக்காது என்பதால் இதை வைத்து அவற்றை செய்துவிடுவேன்.

  5. Dr.M.K.Muruganandan Says:

    கரணைக் கிழங்கு கறி, பொரியல் எல்லாமே சுவையானவை. அருமையான குறிப்பு.
    ஆனால் கரணைக் கிழங்கை வெட்டும்போது உங்கள் கையில் அரிப்பு ஏற்படுவதில்லையா. சிலர் தங்களுக்கு அவ்வாறு ஏற்படுவதாகச் சொல்லியதால் கிளவுஸ் போட்டு வெட்டும்படி ஆலோசனை கூற வேண்டியதாயிற்று

    • chitrasundar5 Says:

      டொக்டர் ஐயா,

      பெயர்க் குழப்பத்தை தெளிய வைத்ததற்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.நாங்க பேச்சு வழக்கில் ‘கர்ணக்கிழங்கு’னு சொல்லுவோம். ‘கருணை’யைத்தான் ‘கர்ண’ ஆக்கிட்டோம்னு நெனச்சிட்டேன்.உங்க பின்னூட்டத்தால் இப்போது தலைப்பில் சிறு திருத்தம் செய்துவிட்டென்.

      இது கரணைக்கிழங்கு இல்லை ஐயா.அரிக்கவும் இல்லை.ஒருவேளை அந்த வகையைச் சேர்ந்ததா இருக்குமோ தெரியல!

      ஊரில் கரணைக்கிழங்கு நிறைய சமைத்திருக்கிறோம்.நறுக்கிய பகுதி கையில் படாதவாறு பார்த்துக்கொள்வோம்.அப்படியே பட்டாலும் கொஞ்ச நேரம் அரிப்பு இருக்கும்தான்.ஆனாலும் கண்டுகொள்வதில்லை.

      வருகைக்கு நன்றி ஐயா.

  6. srinivasan Says:

    ‘பிடிகருணை’ சிறியது, சட்டி கருணை பெரியது, சேனைக் கிழங்கை மிக சிறியது,
    மூன்றும் தனி தனி கிழக்கு வகைகள்.

    • chitrasundar5 Says:

      Srinivasan,

      நம்ம ஊரில் நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கும். இப்போதைக்கு நாங்கள் இருக்கும் ஊரில் பிடி கரணையும், பெரிய கரணையும் கிடைக்காது. கரணைக்கிழங்கு மாதிரியேயான ஒரு பெரிய கிழங்கில் செய்தது இது.

      தங்களின் வருகைக்கும், தகவலுக்கும் நன்றிங்க. இத்தகவல் வேண்டுபவருக்கு உதவலாம்.


rajisivam51 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி