தட்டை/எள்ளடை/எல்லடை

தேவையானப் பொருள்கள்:

புழுங்கல் அரிசி_2 கப்புகள்

பொட்டுக்கடலை_1/2 கப்

கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப)

பூண்டு_2 பற்கள்

பெருங்காயம்_சிறிது

உப்பு_தேவையான அளவு

எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினமாக இருக்கும்.

பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கவும்.மாவு மழமழவென இருக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலைப் பருப்பு, பெருங்காயம்,உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.அதுதான் சரியான மாவு பதம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்றவும்.மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி பேப்பர் டவலில் வைத்து வட்டமாகத் தட்டவும்.மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும்.அவ்வளவு மெல்லியதாகத் தட்ட வேண்டும்.

எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வைக்கவும்.ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு ஆற வைத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும்.இப்போது சுவையான, மொறுமொறுப்பான எள்ளடைத் தயார்.

குறிப்பு:

விருப்பமானால் மாவு பிசையும் போது எள் 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளிப் போட்டு தட்டலாம்.எள்ளடையை புழுங்கல் அரிசியில் செய்தால்தான் நல்ல சுவையாக,மொறுமொறுப்பாக இருக்கும்.

3 பதில்கள் to “தட்டை/எள்ளடை/எல்லடை”

  1. Mahi Says:

    எள்ளு சேர்க்காமலே இதற்குப் பேர் எள்ளடையாங்க? 😉 ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பேர் சொல்வாங்க போலும்! சென்னையைச் சேர்ந்த ஒரு தோழி இதற்குப்பேர் “ஓட்டைவடை” என்றார். அவருக்கு தட்டவடை/தட்டமுறுக்கு/ தட்டை என்ற பேரெல்லாம் தெரியலை.. 🙂

    இதெல்லாம் நம்ம ஃபேவரிட் நொறுக்ஸ்~~ஆனா பாருங்க, பொங்கலுக்குதான் செய்வேன்,மற்ற நாட்களில் செய்வது rare! [எல்லாம் டயட்டு;) செய்யும் வேலை!!] பூண்டு சேர்த்ததில்லை..அடுத்த முறை சேர்த்துப் பார்க்கிறேன்!

    • chitrasundar5 Says:

      மகி,
      எதனால் இந்தப் பெயர் என்று தெரியவில்ல.ஒருவேளை நாளடைவில் சேர்க்கவில்லையோ என்னவோ.’தட்டவடை/தட்டமுறுக்கு/ தட்டை’‍_முதலில் எனக்கும் இது புதிதாகத்தான் இருந்தது.நானும் இதுதான் சரியென நினைத்து தட்டை என மேலே போட்டுள்ளேன்.பூண்டு சேர்த்தால் நல்ல வாஸனையாக இருக்கும்.

      நானும் டாக்டரிடம் சென்று டயட்டுக்கான அறிவுரையெல்லாம் வாங்கிட்டு வந்தேன்.இருந்தாலும் இவற்றை விட முடியவில்லை.Dr சொன்ன ஒன்றை மட்டும் ஃபாலோ பன்னுவேன்.அதுதாங்க one hour fast walking.என்ன மழையோ,வெயிலோ,இடியே இடித்தாலும் விடமாட்டேன்.ஸ்வீட் மட்டும் தொடவேமாட்டேன்.ஸ்வீட் சாப்பிடாமல் இருந்துவிடுவேன்.ஆனால் இந்தக்காரம் இல்லாமல் என்னால் முடியாது.ஆள் கிடைத்ததும் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.

      எள்ளடையைத் தேடிப்பிடித்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி மகி.

    • chitrasundar5 Says:

      மகி,

      ஞாபகம் வந்தாச்சு.எங்க ஊர் பக்கம் ஏதாவது ஒன்னு(அதாவது தோசை,அடை போன்றவை)மிகவும் மெல்லியதாக இருந்தால் எல்லடையாட்டம் இருக்குன்னு சொல்லுவாங்க.ஒருவேளை அதனால்தான் இந்தப்பெயராக இருக்கனும்.


மறுமொழி இடுக‌