இங்கு கடைகளில் அவ்வளவாக பாவக்காய் வாங்குவதில்லை.சம்மரில் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் இளம் பிஞ்சாக நிறைய வரும்.இரண்டுமூன்று வாங்கலாம் என்றால் மனசு கேட்காமல் நிறைய வாங்கிவிடுவேன்.பொரியல், புளிக்குழம்பு என செய்தபிறகு மீதமாகும் பாவக்காய்களை பேக்(ட்)டு சிப்ஸ் செய்வேன்.எவ்வளவு செய்தாலும் உடனே காலியாகிவிடும். பாவக்காயின் கசப்புத் தன்மையினால் சாப்பிடாதவர்களும் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
பாவக்காய்களை சிப்ஸ் கட்டையில் வைத்து சீவி,வில்லைகளாக்கி, எவர்சில்வர் தட்டுகளில் ஒவ்வொன்றாக அடுக்கி வெய்யிலில் காய வைத்து, வத்தலாக்கி எடுத்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது வத்தக்குழம்பும் செய்துவிடலாம்.
தேவையானவை:
பாவக்காய்_2 (பெரியது)
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
ஆலிவ் ஆயில்_ஒரு டீஸ்பூன்
உப்பு_சிறிது
செய்முறை:
பாவக்காயை நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டு சிப்ஸ் கட்டையில் வைத்து வில்லைகள் போடவும்.இதற்கு கத்தியைக்கூடப் பயன்படுத்தலாம்.ஆனால் வில்லைகள் ஒரே அளவாக வருமாறு பார்த்துக்கொள்ளவும். இல்லையென்றால் ஒவ்வொன்றின் வேகும் நேரமும் வேறுபடும்.
ஒரு தட்டில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலந்துகொண்டு,அதில் பாவக்காய் வில்லைகளைப் போட்டுப் புரட்டி, மிளகாய்த்தூள் எல்லா பகுதிகளிலும் சீராகப் படுமாறு செய்யவும்.
இவ்வாறு செய்த பிறகு எண்ணெயை வில்லகளின்மேல் பரவலாக ஊற்றிக் கிளறி ஒரு பௌளில் வைத்து மூடி ஃப்ரிட்ஜில் ஒரு 1/2 மணி நேரம் வைக்கவும்.
அவனை 350 டிகிரிக்கு சூடுபடுத்தவும்.பேக்கிங் ட்ரேயில் அலுமினம் ஃபாயிலைப்போட்டு ஒவ்வொரு வில்லையாக அடுக்கி அவனில் வைத்து பேக் செய்யவும்.
பாவக்காய் வேக ஆரம்பிக்கும்போதே பாவக்காயின் கசப்பு மணம் நன்றாக வரும்.
ஒரு 10 நிமி கழித்த பிறகு வெளியே எடுத்து வில்லைகளைத் திருப்பிவைக்கவும். இவ்வாறே அடுத்தடுத்து 8 லிருந்து 10 நிமிடத்திற்கு இரண்டு தடவைத் திருப்பிவிடவும்.
அடுத்து நான்கைந்து நிமிடங்களுக்கு இரண்டு தடவை அல்லது தேவைப்படும் நேரத்திற்கு ஒருமுறை திருப்பிவிடவும்.
கடைசியில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.இல்லையென்றால் தீய்ந்துபோக வாய்ப்புண்டு.
ஒவ்வொரு முறை ட்ரேயை வெளியில் எடுக்கும்போதும் வெந்திருக்கும் ஒருசிலவற்றை எடுத்துவிடவும். சிவக்கட்டும் அல்லது ப்ரௌன் நிறமாகட்டும் என நினைக்க வேண்டாம்.வெந்த சிப்ஸும்கூட பச்சையாகத்தான் இருக்கும்.நடுவிலுள்ள பகுதி மட்டுமே லேஸாக சிவந்திருக்கும்.
கடைசியில் எல்லா சிப்ஸும் வெந்த பிறகு ட்ரேயை வெளியில் வைத்து ஆறவிடவும்.
கொஞ்சம் இருக்கட்டுமே என்று ஸ்விட்ச் ஆஃப் செய்தபிறகு அவனிலேயே விட வேண்டாம்.கருகிவிடும்.
இப்போது சுவையான,கரகரப்பான பேக்(ட்)டு பாவக்காய் சிப்ஸ் தயார்.நன்றாக ஆறிய பிறகு எடுத்து சாப்பிடவும்.
1:29 பிப இல் ஜூன் 28, 2012
பாகற்காய் சிப்ஸ் நல்லா இருக்கு சித்ராக்கா! ஆனால் /ஒரு 10 நிமி கழித்த பிறகு வெளியே எடுத்து வில்லைகளைத் திருப்பிவைக்கவும். இவ்வாறே அடுத்தடுத்து 8 லிருந்து 10 நிமிடத்திற்கு இரண்டு தடவைத் திருப்பிவிடவும். அடுத்து நான்கைந்து நிமிடங்களுக்கு இரண்டு தடவை அல்லது தேவைப்படும் நேரத்திற்கு ஒருமுறை திருப்பிவிடவும்./ இந்தக் காரணத்துக்காகவே நான் அவன்-ல நிறைய சமைப்பதில்லை..எத்தனை முறை திருப்பித் திருப்பி..அவ்வ்வ்வ்! பொரிக்க வேண்டிய ஐட்டங்கள்னா அடிக்கடி செய்யாமல் எப்பவாவது ஒரு முறை டைரக்ட்டா டீஃப் ப்ரை செய்துருவேன். ஹிஹி! 😉 🙂
பாகற்காய் நல்லா இளசா இருக்கு. இங்கே இந்தியன் ஸ்டோரில் 2வது படத்தில் வைச்சிருக்கீங்களே, அது போல குட்டையான காய்கள்தான் ரெகுலரா வரும். என்னவருக்கு இந்தக்காயும் “நோ-நோ”தான்! 😉 நான் பலநாட்களுக்கு ஒருமுறை வாங்கி புளிகுழம்பு செய்வதோடு சரி.
2:07 பிப இல் ஜூன் 28, 2012
வேலை அதிகம்தான்.என்ன செய்வது!எங்க வீட்டில் எல்லோருக்குமே இது பிடிக்கும். 2வது பட பாவக்காயும் இளசுதான் .ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கியது. இன்னும் இரண்டுமூன்று வெரைட்டி இருக்கு.நான் வாங்கியதில்லை.
‘பலநாட்களுக்கு ஒருமுறை வாங்கி’_ கசப்புக்குத்தானே பயம்.நிறைய சி. வெங்காயம்,தக்காளி சேர்த்து பொரியல் செய்ங்க.சிலர் கடைசியில் வெல்லம் சேர்ப்பாங்க. எனக்குப் பிடிக்காது.
ஒரு சமயம் சிதம்பரத்தில் ஒரு ஹோட்டலில் பாவக்காய் சாம்பார் வச்சிருந்தாங்க.பயந்துகொண்டே சாப்பிட்டேன்(என் சித்தி மகளுடன்). அவ்வளவு சுவை.இன்றும்கூட நாங்க ரெண்டு பேரும் மீட் பன்னினா முதல் பேச்சு அதைப்பற்றியதாகத்தான் இருக்கும். வருகைக்கு நன்றி மகி.
10:54 பிப இல் ஜூலை 26, 2012
உங்கள் தளத்திற்கு முதல் வருகை ! இனி தொடர்வேன்.
பகிர்வுக்கு நன்றி.
10:55 பிப இல் ஜூலை 26, 2012
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…
வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_27.html) சென்று பார்க்கவும். நன்றி !
நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க… நன்றி.
10:07 முப இல் ஜூலை 27, 2012
திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.தங்களின் வலைதளத்தைக் கட்டாயம் பார்வையிடுவேன்.
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதைத் தெரிவித்தமைக்கு நன்றி.