ஊரில் இருக்கும்வரை கலவை கீரை அடிக்கடி கிடைக்கும்.எங்கம்மா அதை புளி சேர்த்து கடைஞ்சிருவாங்க.கதம்ப சாம்பார் மாதிரி இந்தக் கலவை கீரையும் சுவையாக இருக்கும்.
கலவைக் கீரை என்பது சிறுகீரை,முளைக்கீரை,தண்டுக்கீரை,அரைக்கீரை கொய்யாக்கீரை,குப்பைக்கீரை, பசலைக் கீரை, பருப்புக் கீரை என எல்லாக் கீரைகளும் சேர்ந்ததாகும்.அப்படித்தான் இந்தப் பருப்புக் கீரையைப் பார்த்திருக்கிறேன்.தனியாக சமைத்ததில்லை.
சென்ற வருடம் முதன்முறையாக ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் இந்த பருப்புக் கீரையைப் பார்த்ததும் வாங்கிவந்து சமைக்காமலேயே தூக்கிப் போட்டுவிட்டேன்.லேஸான ஒரு கொழகொழப்பு தெரிந்தது.இப்போது இரண்டு வாரங்களாக இக்கீரை வந்துகொண்டிருக்கிறது.
‘நல்லதுமா,சமைத்து சாப்பிடு’, என அம்மா சொல்லியதால் இந்த முறை விடுவதாக இல்லை என வாங்கிவந்து இரண்டு நாட்கள் சமைத்தாயிற்று. சூப்பராக இருந்தது.உங்களுக்குக் கிடைத்தால் நீங்களும் சமைத்துப் பாருங்களேன்.
இவ்வளவு பசுமையாக இருப்பதை வாங்காமல் விடலாமா!!
(கீழே படத்திலுள்ள கீரை எங்கள் வீட்டு தொட்டியில் வளர்த்தது)
தேவையானவை:
பருப்புக்கீரை_1/2 கட்டு
பச்சைப் பயறு_1/4 கப்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_1
பூண்டிதழ்_2
அரைக்க:
தேங்காய் பத்தை_3
காய்ந்த மிளகாய்_1(காரத்திற்கேற்ப)
சீரகம்_கொஞ்சம்
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.
பச்சைப் பயறு வேக ஆகும் தண்ணீரின் அளவைவிட ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் கூடுதலாக விட்டு பூண்டிதழ், பெருங்காயம், மஞ்சள்தூள்,இரண்டு துளி விளக்கெண்ணெய் சேர்த்து மலர வேக வைக்கவும்.குழைந்துவிட வேண்டாம்.
பயறு பாதி வேகும்போதே வெங்காயம்,தக்காளி சேர்த்து வேக விடவும்.
தேங்காயுடன்,சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
வெந்து கொண்டிருக்கும் பயறில் அரைத்த விழுது+கீரை இரண்டையும் சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க விடவும்.
கீரை வெந்து எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்து கீரையில் கொட்டிக் கலக்கவும்.
இதனை சாதத்துடனோ அல்லது சாதத்துக்கு பக்க உணவாகவோ சாப்பிடலாம்.
9:32 பிப இல் மே 21, 2013
சுவையான பருப்புக் கீரை…
செய்முறை குறிப்பிற்கு நன்றி அம்மா…
6:32 பிப இல் மே 27, 2013
தனபாலன்,
வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.
1:24 முப இல் மே 22, 2013
நான் வெங்காயம் தக்காளி சேர்க்காமல் செய்வேன். இந்த செய்முறை எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது ..இத்தனை அருமையான ரெசிபிகளை சொல்கிறீர்களே. உங்கள் கணவரும்,மகளும் கொடுத்து வைத்தவர்கள் தான். அவர்கள் விதம் விதமாய் சாப்பிடலாமே!
4:24 பிப இல் மே 22, 2013
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க,முதலில் இறங்கி வருகிறேன்.”உங்கள் கணவரும்,மகளும் கொடுத்து வைத்தவர்கள் தான்”____இதைப் படித்ததும் கால் கீழ பதியல.
இவரிடம் சொல்லியதற்கு,”பாவமான ரெண்டு எலி சாப்பிடுற மாதிரி ஒரு படம் போட்டுடு,சரியாயிடும்”,என்றார்.
இந்த செய்முறை மாதிரியும் ஒரு தடவ செஞ்சு பாருங்க.உங்களுக்குத்தான் விதம் விதமாகக் கீரைகள் கிடைக்குமே.வருகைக்கு நன்றிங்க.
7:38 முப இல் மே 22, 2013
What’s the english/american name for this paruppu keerai?
4:07 பிப இல் மே 22, 2013
Hi asjs,
The english name for paruppu keerai is purslane.
10:59 முப இல் மே 22, 2013
கோவையில் பருப்புக் கீரை என்பது வேறு மாதிரி இருக்கும். இந்தக் கீரை எனக்கு புதிதாகத் தெரியுது சித்ராக்கா! சத்தான குறிப்பு. கீரைக்கு ஆங்கிலப் பேர் தெரிந்தாச் சொல்லுங்க, எங்கூர் (சூப்பர்) மார்க்கெட்ல பார்க்கிறேன். உழவர் சந்தையெல்லாம் மறந்து போயிட்டோம்! 😉 🙂
11:01 முப இல் மே 22, 2013
கூடவே கீரையின் இன்னொரு படமும்..ப்ளீஸ்! பாத்த மாதிரியும் இருக்கு, பார்க்காத மாதிரியும் இருக்கு..அவ்வ்வ்வ்வ்! இந்த கீரையினை தண்டுடனே சமைப்பீங்களா இல்லை இலைய மட்டும் சமைக்கணுமா?
4:48 பிப இல் மே 22, 2013
ஸாரி மகி,கீரையை ஆய்ந்த பிறகு எடுக்கலாம் என நினைத்து பிறகு மறந்துவிட்டேன்.இந்த வாரம் போய் வாங்கிவந்ததும் முதல் வேளையாக போட்டுவிடுகிறேன்.
ஊர்ல இந்தக் கீரை ரொம்பவே குட்டிகுட்டியா இருக்கும்.அப்படியே போட்டுடுவாங்க.இங்கே தண்டு கொஞ்சம் பெரிதாக இருப்பதால் கீரையை மட்டும் & நுனிப்பகுதியில் உள்ள கீரையை தண்டுடனும் எடுத்துக்கொண்டேன்.
அடுத்த தடவ வாங்கினால் தண்டை சாம்பாரில் போடலாம் என இருக்கிறேன்.ஒன்றரை டாலருக்கு வாங்கிட்டு முக்கால் பகுதியை கீழே போட்டால் எப்படி?அதனாலதான்.
1:29 பிப இல் மே 27, 2013
கீரையோட படம் இணைச்சிருக்கேன்.இதுவா பாருங்க.அப்படியே கோவை பருப்பு கீரை எதுன்னு கொஞ்சம் சொல்லுங்க.
11:14 பிப இல் மே 23, 2013
இந்த பருப்புக்கீரை கொஞ்சம் வேரெ மாதிரி இருக்கு. கலவங்கீரை
வீட்டு தோட்டத்திலேயே கிடைத்து விடும். நீ எழுதியுள்ள கீரைகளுடன்,அமாம் பச்சரிசி,மூக்கரட்டை, துத்தி, வேளை,கீழாநெல்லி,இவைகளும் தானாகவே முளைத்திருப்பது கிடைக்கும்.பொன்னாங்கண்ணியும் கிடைக்கும். உன்னுடைய பருப்புக்கீரை சமையல் நன்றாக இருக்கு. படம் ரொம்பவே அழகாக இருக்கிறது. கலவங்கீரை மிகவும் ருசி இல்லையா? நல்ல குறிப்பு.. அன்புடன்
3:00 பிப இல் மே 24, 2013
காமாக்ஷிமா,
ஆமாம்,நீங்க சொல்லியுள்ள கீரைகளும்,இன்னும் நிறைய பெயர் தெரியாத கீரைகளும் கலந்துதான் இருக்கும்.வயலில் களை எடுத்தால் இந்தக் கீரைகள் வீட்டிற்கு வரும்.ரொம்பவே பொடிபொடியா இருக்கும்.நீங்க சொன்ன மாதிரி எல்லோரது தோட்டங்களிலும்கூட முளைத்திருக்கும்.
“இந்த பருப்புக்கீரை கொஞ்சம் வேரெ மாதிரி இருக்கு”_____இரண்டொரு நாளில் ஆய்ந்த கீரையை படம் போடுகிறேன்.எப்படி இருக்குன்னு பாருங்க. அன்புடன் சித்ரா.
2:11 பிப இல் மே 24, 2013
இன்னிக்கு ட்ரை பண்ணப்போறேன்.
3:14 பிப இல் மே 24, 2013
அப்பாதுரை,
எப்படி இருந்தது என்று வந்து சொல்லுங்க.வருகைக்கும்,ட்ரை பண்ணுவதற்கும் நன்றிங்க.
11:55 முப இல் ஜூன் 3, 2013
கீரை படம் இணைத்ததுக்கு நன்றி சித்ராக்கா! இந்தக் கீரை ஊரில் பாத்திருக்கேன், ஆனால் பெயர் தெரியாது. சர்க்கரை வியாதிக்காரங்களுக்கு ரொம்ப நல்லது என சொல்வாங்க. அதனால் அப்பவெல்லாம் இந்தக் கீரையைப் பார்த்தாலே புடிக்காது! 😉 ஓரிரு முறை சாப்பிட்டிருப்பேன் என நினைக்கிறேன், ஆனால் அப்ப ருசி பிடிக்கலை! ஹிஹி… 🙂
கோவை பருப்புக் கீரை…படத்துக்கு எங்கே போவேன்!?! தண்டுக்கீரை போலவே இருக்கும், ஆனால் இலையில் பின்பகுதி கொஞ்சம் முசுமுசுன்னு இருக்கும், ருசி சூப்பரா இருக்கும். ஊரில் சைக்கிளில் பெரிய கூடைகள் கட்டி கீரைக்காரங்க கொண்டு வருவாங்க. படம் கிடைப்பது சந்தேகமே!
6:15 பிப இல் ஜூன் 6, 2013
நானும் போனவருஷம் வாங்கிட்டுவந்து தூக்கிப் போட்டுட்டேன்.எங்கம்மா எல்லாக் கீரைகளையும் சேர்த்து செய்யும்போது இதுவும் ஒன்றிரண்டு இருக்கும்.அப்படி சாப்பிட்டதுதான்.ஆனால் ஊரில் குட்டிகுட்டியா இருக்கும்.
கோவை பருப்புகீரை இங்குள்ள கீரைகளில் ஒன்றாக இருக்கும்னு நெனச்சிட்டேன்.இந்தக் கீரையில் இரண்டு பக்கமும் இரண்டு விதமான பச்சை நிறம்.இலைகள் கொஞ்சம் தடித்து,லேஸா கொழகொழப்புடன் இருக்கு.கிடைச்சுதுன்னா வாங்கி செஞ்சு பாருங்க.நன்றி மகி.