சௌசௌ கூட்டு

 

koottu

காமாக்ஷிமாவின் செய்முறையைப் பார்த்து செய்த குறிப்பு இது. அசல் குறிப்பைக் காண இங்கே செல்லவும். அதே பொருள்கள்தான், ஆனால் ஒருசில மாற்றங்களுடன் செய்திருப்பேன்.

தேவையானவை:

சிறிய பிஞ்சு சௌசௌ _  1
பச்சை வேர்க்கடலை _ ஒரு கைப்பிடி (காய்ந்ததாக இருந்தால் முதல் நாளே ஊறவைத்துக்கொள்ளவும்)
பச்சப்பருப்பு _ 2 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு

வறுத்து அரைக்க:

இட்லி உளுந்து _ ஒரு டீஸ்பூன்
மிளகு _ 5
சீரகம் _ ஒரு டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் _ 1
தேங்காய்ப் பூ _ 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வேர்க்கடலையில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

20140303_081507

பச்சைப்பருப்பை லேஸாக வறுத்துக்கொள்ளவும். வறுத்தால் நல்ல வாசனை வரும், இல்லையென்றாலும் பரவாயில்லை.

ஒரு பாத்திரத்தில் பச்சைப்பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயம், துளி விளக்கெண்னெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

வெறும் வாணலியை அடுப்பில் ஏற்றி வறுக்கக் கொடுத்துள்ளவற்றில் முதலில் உளுந்து போட்டு சிவந்ததும் மிளகு, காய்ந்தமிளகாய், சீரகம் என அடுத்தடுத்து போட்டு சூடேறியதும் எடுத்துவிட்டு அதே சூட்டிலேயே தேங்காய் பூவை போட்டு வறுத்துக்கொள்ளவும். இவை ஆறியதும் முதலில் தேங்காய் இல்லாமல் பொடித்துக்கொண்டு கடைசியில் தேங்காய் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பருப்பு முக்கால் பதம் வேகும்போது சௌசௌ, வெந்த வேர்க்கடலை இரண்டையும் சேர்த்து கிண்டிவிட்டு வேக வைக்கவும்.

காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, தேவைக்கு உப்பு போட்டு, கொதிக்கவிட்டு எல்லாம் சேர்ந்து கொதித்ததும், தாளிப்பதை தாளித்து, கூட்டில் கொட்டி கிண்டிவிட்டு, கொத்துமல்லி கிள்ளிப்போட்டு இறக்கவும்.

koottu

சாதத்துடன் சேர்த்தோ, அல்லது தொட்டுக்கொண்டோ சாப்பிட சூப்பரோ சூப்பர். முக்கியமாக உளுந்து வறுத்து சேர்த்ததால் நல்ல வாசனையுடன் அருமையாக இருந்தது.

குறிப்பை பகிர்ந்துகொண்ட காமாக்ஷி அம்மாவுக்கும் நன்றி.

 

கூட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 18 Comments »

18 பதில்கள் to “சௌசௌ கூட்டு”

  1. மகிஅருண் Says:

    கூட்டில் வேர்க்கடலை? புதுசா இருக்கு சித்ராக்கா!இப்பல்லாம் ஒன்லி வறுத்த வேர்க்கடலைதான் வாங்கறது.. பச்சைக்கடலை வாங்கினதும் செய்துபார்க்கிறேன்.

    • chitrasundar5 Says:

      வேர்க்கடலையை ஊறவச்சிட்டா எங்க வீட்டு சாம்பார், பொரியல், குருமா என எல்லாவற்றிலும் இருக்கும். ஆனா கூட்ல போட்டது மட்டும் இப்போதான் மகி. செஞ்சு பாருங்க, நல்லாவே இருக்கு.

      ஆஹா, வேர்க்கடலைய வறுக்கக்கூட அம்மா விடமாட்டாங்களா ! 1/2 நாள் லீவு போடச்சொல்லி ஒப்படச்சிட்டு வறுக்க வேண்டியதுதானே !!

  2. cheena ( சீனா ) Says:

    அன்பின் சித்ரா சுந்தர் – எங்கள் வீட்டில் அடிக்கடி சௌசௌ கூட்டு வைப்போம் – விரும்பி உண்போம் – நல்லதொரு பதிவு – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    • chitrasundar5 Says:

      சீனா ஐயா,

      நானும்கூட சாதாரணமாக‌ சௌசௌ கூட்டு செய்வதுண்டு. இதில் வேர்க்கடலையும், உளுந்து வறுத்தும் சேர்த்து செய்தது புதிதாகவும், நன்றாகவும் இருந்ததால் பதிவு செய்துகொண்டேன். வருகைக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.

  3. Dindigul Dhanabalan (DD) Says:

    உங்களின் முறைப்படி செய்து பார்ப்போம்… நன்றி அம்மா…

  4. ranjani135 Says:

    சௌசௌ கூட்டு இப்போதுதான் காமாக்ஷிமாவின் பதிவில் படித்தேன். இங்கும் அதே!
    கூட்டு குக்கரில் செய்ய மாட்டீங்களா?
    உருண்டை உளுத்தம்பருப்பு தான் இட்லி உளுந்தா?
    (இரண்டு கேள்விகள்தான்!)

    வேர்கடலை குக்கரில் சீக்கிரம் வந்துவிடுமே, வெளியில் வேக நீண்ட நேரம் ஆகாதோ? )இது கேள்வியில்லை, வியப்பு!)

    எனிவே. கூட்டு வாசனையாக நன்றாக இருக்கிறது.

    • chitrasundar5 Says:

      சொன்னா நம்பமாட்டீங்க, எல்லா சமையலுமே குக்கர் இல்லாமல்தான். சுவையில் வித்தியாசம் இருக்கு. இங்கு வந்த பிறகு அடித்துப்பிடித்து செய்ய வேண்டியது இல்லாததால் எஞ்ஜாய் பண்ணி சமைக்கிறேன். பருப்பு வெந்த பிறகு வரும் ஒருவிதமான‌ வாசனையால் குக்கரை திறக்கவே பிடிக்காது. ஆனால் பாத்திரத்துல பருப்பு வேகும்போது நல்ல வாசனை வரும். சாம்பார் வைக்கவும் விருப்பமாக இருக்கும். கீரைகூட வெளியில் வேகவைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.

      சுண்டலை குக்கர்ல வச்சா கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க. ஒன்னும் சொல்லமாட்டாங்க. இருந்தாலும் நான் யூஸ் பண்ணுவதில்லை. கொஞ்சம் கூடுதல் நேரமானாலும் பரவாயில்லைன்னு தோன்றுகிறது. நானும் குக்கர்(இல்லா) புராணம் நிறைய பாடிட்டேனோ !!

      தோல் இருக்கற உடைச்ச உளுந்துதாங்க‌ இட்லிக்கு. வருகைக்கு நன்றிங்கோ !!

  5. mahalakshmivijayan Says:

    சௌ சௌ கூட்டுக்கும் என் வீட்டுக்கும் ரொம்ப தூரம் சித்ரா அக்கா! ஆஸ்துமாவின் பயம் காரணமாக தண்ணீர் சத்து மிகுந்த காய்களை சேர்த்து கொள்வதே இல்லை 😦 ஆனால் எனக்கு பிடிக்கும் நான் சாப்பிடுவேன். புகைப்படத்தில் பார்க்க அழகாக இருந்தது உங்கள் கூட்டு. செய்முறையும் மிக வித்யாசமாக.. ஒரே ஒரு டவுட் பச்சை பருப்பு என்றால் என்ன??

    • chitrasundar5 Says:

      ஆஸ்துமாவுக்கு தண்ணீர் சத்து நிறைந்த காய்கறிகள் சாப்பிடக் கூடாதா! பரவாயில்ல நீங்க செஞ்சு சாப்பிடுங்க. மஞ்சள் நிறத்தில் இருக்குமே, தோலில்லாத உடைச்ச பச்சைப்பருப்பு. அதை நீங்க என்ன சொல்லுவீங்கன்னு தெரியலயே, ஒருவேளை பாசிப் பருப்பாக இருக்குமோ! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, படத்தை சேர்த்துவிடுகிறேன்.

      • adhi venkat Says:

        இதை பயத்தம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு என்று தான் சொல்வோம்.

      • chitrasundar5 Says:

        ஆதி

        இது முழுசா பச்சையா இருந்தா முழு பச்சைப்பயறு அல்லது முழு பச்சைப்பருப்பு, படத்திலுள்ளது மாதிரி இருந்தா உடைச்ச பச்சைப்பயறு அல்லது உடைச்ச பச்சைப்பருப்புன்னு சொல்லுவோம்.

        Black eye beans ஐத்தான் எங்க ஊர் பக்கம் பயத்தம் பயறுன்னு சொல்லுவோம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர்போல. இனி எழுதும்போது இப்படியும் எழுத வேண்டியதுதான். வருகைக்கு நன்றிங்க‌.

      • mahalakshmivijayan Says:

        ஆமாம் சித்ரா அக்கா பாசி பருப்பு என்று தான் சொல்லுவோம்! அதற்கு பச்சை பருப்பு என்று ஒரு பெயர் உண்டோ.. புதிதாக கேள்வி படுகிறேன் 🙂

      • chitrasundar5 Says:

        மஹா,

        உங்க ஊரிலும் பாசிப்பருப்பா !! பச்சைபயறுல இருந்து எடுக்கறதால உடைச்ச பச்சைப் பருப்புன்னு சொல்றாங்கன்னு நினைக்கிறேன். புதுசா ஒரு தமிழ் பெயரை அறிமுகப்படுத்தி வச்சிருக்கேன்போல. உங்க விருப்பம்போல சீக்கிரமே செஞ்சு சாப்டுங்க.

  6. chollukireen Says:

    சித்ரா பதிவும்,கூட்டும் நன்றாக இருக்கு.. எனக்கு சற்று அதிகம் எழுத முடிவதில்லை.. உனக்குப் பதில் எழுதாமலா? எந்த சமையலும்,ருசிக்கேற்ப மாற்றுவதுதான் நல்லதுது. நம்முடைய வகையும் கிடைக்கும் அல்லவா. ? மிக்க ஸந்தோஷம் அன்புடன்

    • chitrasundar5 Says:

      காமாக்ஷிமா,

      உங்க எழுத்துக்கு முன்னால் என்னுடைய‌தெல்லாம் சும்மாம்மா. டைப்பண்ண விரல்களுக்குத் தெம்பு வேண்டுமே.

      நல்ல வாசனையுடன் சாப்பிடவே நன்றாக இருந்ததில் சந்தோஷம் அம்மா. அன்புடன் சித்ரா.

  7. adhi venkat Says:

    எங்கள் வீட்டில் கூட்டில் வேர்க்கடலை சேர்க்கும் பழக்கம் உண்டு. நன்றாக இருக்கும். உளுந்து வறுத்து சேர்ப்பதும் தான். அருமையான குறிப்பு. பகிர்வுக்கு நன்றி.

    • chitrasundar5 Says:

      வேர்க்கடலை சேர்ப்பது, உளுந்து வறுத்து சேர்ப்பது ரெண்டுமே எனக்குப் புதுசுங்க. வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.


mahalakshmivijayan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி