கிழங்கு சுடுதல் & அவித்தல்

கிழங்கு  சுடுதல்:

கிழங்குகளை அவித்து சாப்பிடுவதைவிட விறகடுப்பில் உள்ள நெருப்பில் சுட்டு சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும். அடுப்புமில்லை, நெருப்புமில்லை. அதற்குப் பதிலாக அவனில் சுட்டு எடுக்கலாம்.

கீழேயுள்ள முறையில் மரவள்ளிக்கிழங்கு,உருளைக்கிழங்கு இவற்றையும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

வள்ளிக்கிழங்கு/மரவள்ளிக்கிழங்கு/உருளைக்கிழங்கு _1
எண்ணெய்_ஒரு டீஸ்பூன்

வள்ளிக்கிழங்கை நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டு ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்/வெஜிடபிள் எண்ணெயை கிழங்கு முழுவதும் தடவிவிட்டு ஒரு ஃபோர்க் ஸ்பூனால் அங்கங்கே குத்திவிட்டு அவன் ட்ரேயில் அலுமினம் ஃபாயிலைப் போட்டு அதில் கிழங்கை வைத்து 400 டிகிரியில் பேக் செய்யவும்.

பெரிய கிழங்காக இருந்தால் வேக 45 நிமி ஆகும்.கிழங்கின் அளவைப் பொருத்து நேரம் மாறுபடும்.

முதல் 1/2 மணி நேரம் கழித்து அவனைத் திறந்து கிழங்கைத் திருப்பி விடவும்.

அடுத்த 1/4 மணி நேரத்தில் கிழங்கு சாப்பிட ரெடியாகிவிடும்.கிழங்கைத் தொட்டுப் பார்த்து லேஸாக அமுங்கினால் எடுத்து துண்டுகள் போட்டு சாப்பிடவேண்டியதுதான்.

புதிதாக சமைப்பவர்களுக்கு இது உதவும் என்று நினைக்கிறேன்.

கிழங்கு அவித்தல்:

தேவையானப் பொருள்கள்:

வள்ளிக்கிழங்கு/மரவள்ளிக்கிழங்கு_1
உப்பு_சிறிது

ஒரு இட்லிப் பாத்திரத்தில் இட்லிக்கு வைப்பதுபோலவே தண்ணீர் விட்டு இட்லித்தட்டை வைத்து அதில் ஈரமான இட்லித்துணி/பேப்பர் டவல் போட்டு மூடி அடுப்பில் ஏற்றி தண்ணீர் கொதி வருவதற்குள் பின்வரும் வேலையை
செய்துகொள்வோம்.

மரவள்ளிக் கிழங்கை விருப்பமான அளவில் துண்டுகளாக நறுக்கி அதன் தோலை உரித்துவிட்டு (தோலுடன் அவித்தால் இன்னும் சுவையாக இருக்கும்) வெட்டுபட்ட பகுதியில் உப்பு ஸ்ப்ரே செய்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லித் தட்டில் அடுக்கி வைத்து மூடி போட்டு வேக வைக்க‌ வேண்டும்.

                          

கொஞ்ச நேரம் கழித்து மூடியைத் திறந்து கிழங்கு வெந்துவிட்டதா எனப் பார்த்து (கிழங்கை லேஸாக அழுத்தினால் அமுங்க வேண்டும்.) எடுத்துவிடவும்.

பிறகு சிறுசிறு துண்டுகள் போட்டு சாப்பிடலாம்.சாப்பிட்டு மீதமான கிழங்கில் பொரியல் செய்யலாம்.

       

இதே முறையிலேயே வள்ளிக் கிழங்கையும் ( தோலெடுக்காமல்) அவித்தெடுக்க வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கு வடை

தேவையானப் பொருள்கள்:

மரவள்ளிக்கிழங்கு _1

புழுங்கள் அரிசி_1/2 கப்

சின்ன வெங்காயம்_10

பச்சை மிளகாய்_2

கறிவேப்பிலை_10  இலைகள்

கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

பெருங்காயம்_சிறிது

உப்பு_தேவையான அளவு

எண்ணெய்_பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை:

அரிசியைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.கிழங்கை கேரட் துருவியில் துருவி வைக்கவும்.அரிசி நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு கெட்டியாக மைய அரைத்துக்கொள்ளவும்.கடைசியில் துருவிய கிழங்கையும் அதனுடன்  சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.வடை மாவு பதத்தில் இருக்கட்டும்.மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை இவற்றைப் பொடியாக‌  நறுக்கி மாவுடன் கலந்துகொள்ளவும்.மேலும் உப்பு,பெருங்காயம் இவற்றையும் போட்டு நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.எண்ணெய் சூடேறியதும் மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடைபோல் தட்டி எண்ணெயில் போடவும்.இவ்வாறு எண்ணெய் கொண்டமட்டும் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.உருண்டையாக உருட்டி போண்டா மாதிரியும் போடலாம்.அல்லது வடையின் நடுவில் துளையிட்டும் போடலாம்.இதை சூடாக சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.