முறுக்கு வடாம்

 

தேவை:

புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_1/2 to  1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும்(4 அ  5 மணி நேரம்) கழுவிக் களைந்து கிரைண்டரில் மைய அரைத்தெடுக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும். காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்), சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.உப்பு,காரம் சரி பார்க்கவும்.
முறுக்கு அச்சில் கொஞ்சமாக மாவை எடுத்துக்கொள்ளவும்.அடுத்து  இட்லிப் பானையை அடுப்பில் வைத்து ஒரு இட்லித் தட்டில் ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் சிறுசிறு முறுக்குகளாக அல்லது தட்டு முழுவதும் ஒரு பெரிய முறுக்காக பிழிந்து விட்டு வேக விடவும்.நன்றாக வெந்ததும் எடுத்து தனித்தனியாக தட்டில் வைத்து வெய்யிலில் காயவைக்கவும்.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலர்த்தலாம்.ஏற்கனவே வெந்து இருப்பதால் சீக்கிரமே காய்ந்துவிடும்.

நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம். வெள்ளை முறுக்கு போலவே இருக்கும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

பொரிக்கும் விதம்:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு முறுக்காகப் போட்டு இரு புறமும் திருப்பி விட்டு பொரித்தெடுக்கவும்.சிவக்க வைக்க வேண்டாம்.

மறுமொழி இடுக‌