வடாம் (மற்றொரு வகை)

தேவையான பொருள்கள்

புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_சுமார் 1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு

செய்முறை:

அரிசியை கழுவிக் களைந்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு மைய அரைத்தெடுக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும். காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக, பிசைந்த தட்டை மாவு பதத்தில் இருக்கும்.இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்),சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்ளவும்.

இப்பொழுது மாவிலிருந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில்(அ)பிளாஸ்டிக் பேப்பரில் தட்டை போல் தட்டிக்கொள்ளவும்.இதுபோல் எல்லா மாவையும் தட்டி வைத்து இட்லிப் பானையில் இட்லி அவிப்பது போலவே(ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்)வேக வைக்க வேண்டும்.வெந்ததும் எடுத்து தட்டில் கொட்டி வெய்யிலில் காய விடவும்.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலரவிடலாம்.

நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.இதைப் பொரிக்கும் போது வெள்ளைப் பூ மாதிரி வரும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

பொரிக்கும் விதம்:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வடாமாகப் போட்டு  பொரித்தெடுக்கவும். இரு பக்கமும் திருப்பி விட வேண்டாம்.சிவக்க வைக்கவும் வேண்டாம்.

2 பதில்கள் to “வடாம் (மற்றொரு வகை)”

  1. Mahi Says:

    வடகம் தட்டும் போது மெல்லியதாகத் தட்ட வருமா? அதெப்படி இட்லிப் பானையில் ஒவ்வொரு தட்டையாய் வேகவைப்பது சித்ராக்கா? ஒரு தட்டுக்கு ஒன்று என வைத்தால் கூட ஒரு முறைக்கு 10-12தான் வைக்க முடியும் இல்லையா? எவ்வளவு நிமிஷங்கள் வேக வைக்கணும்?! வழக்கமா இட்லி 8 நிமிடங்கள் வேகவைப்பேன். அது போலவே இதுவுமா?

    இவ்வளவு கேள்விகள் போதும்னு நினைக்கிறேன், பிறகு நீங்க ஏண்டா ரெசிப்பி போட்டோம், இந்தப் பொண்ணு இவ்வ்வ்வ்வ்ளவு கேள்வி கேக்குதே-ன்னு வெறுத்தே போவீங்க! 😉 இந்த செய்முறை எனக்கு புதிதாய் இருப்பதால்தான் இம்பூட்டு டவுட்டு! ஹிஹி! 🙂

    • chitrasundar5 Says:

      மகி,

      எல்லடை தட்டுவது மாதிரிதான்.மாவு கெட்டியா இருக்கனும்.ரொம்ப நேரம்தான் ஆகும்.வேலையும் அதிகம்.இட்லி மாதிரியேதான் வேக வைப்பதும்.ஒவ்வொரு தட்டாகத்தான் வைப்பேன்.4&5 ஒன்பது குழிகள்தான்.ஒரு தட்டுக்கு தட்டுவதற்குள் இன்னொன்னு வெந்துவிடும்.யாராவது தட்டிக்கொடுத்தால் வசதியாக இருக்கும். எதுக்கும் ஒரு கப் அளவிற்கு கொஞ்சமா செய்து பார்க்கலாமே.

      எவ்ளோ கேள்வி வேனா கேளுங்க.ஆனால் மார்க் மட்டும் போடக்கூடாது.போட‌ மாட்டீங்க என்ற தைரியத்துல எல்லாத்துக்கும் பதில் சொல்கிறேன்.நன்றி மகி.


மறுமொழி இடுக‌