கிள்ளிப்போட்ட சாம்பார் (அ) முழு மிளகாய் சாம்பார்

இந்த சாம்பாரில் மிளகாய்த் தூள் இல்லாமல் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டோ (அ) முழு மிளகாயாகவோ போட்டு செய்வதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம் பருப்பு_1/2 கப்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
புளி_சிறு கோலி அளவு
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_2 (அ) 3
கறிவேப்பிலை

பொடிக்க:

மிளகு_5
சீரகம்_1/2 டீஸ்பூன்
பூண்டு_3 பற்கள்

செய்முறை:

துவரம் பருப்பை சிறிது மஞ்சள் தூள்,விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து மலர வேக வைக்கவும்.

புளியை ஊற வைத்து, ஊறியதும் நன்றாக நீர்க்க கரைத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மிளகு,சீரகம் இவற்றைப் பொடித்து அதனுடன் பூண்டை வைத்துத் தட்டி தனியாக வைக்கவும்.

ஒரு குழம்பு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு வெங்காயம் அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் பருப்புத் தண்ணீர் & புளித் தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலக்கி மூடி வைக்கவும். குழம்பு நீர்க்க இருக்க வேண்டும்.

ஒரு கொதி வந்து கொதித்ததும் தனியாகத் தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம்,பூண்டு இவற்றைப் போட்டு கரண்டியால் கலக்கிவிட்டு கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இது சாதத்திற்கு மிக அருமையாக இருக்கும்.முக்கியமாகக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

இதற்கு உருளைக் கிழங்கு வறுவல்,சிக்கன் வறுவல்,முட்டை,மீன் வறுவல்,அப்பளம்,வடாம் இவை பக்க உணவாக நன்றாக இருக்கும்.

4 பதில்கள் to “கிள்ளிப்போட்ட சாம்பார் (அ) முழு மிளகாய் சாம்பார்”

  1. திண்டுக்கல் தனபாலன் Says:

    செய்து பார்ப்போம்… நன்றி…

    • chitrasundar5 Says:

      செய்து பாருங்க,வீட்டில் குட்டீஸ் இருந்தால் விரும்பி சாப்பிடுவாங்க. பதிவைத் தேடிப்பிடித்து கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.

  2. MahiArun Says:

    avvvvv…ஒரு வழியா நானே இந்த ரெசிப்பியக் கண்டுபுடிச்சுட்டேன். சீக்கிரம் செய்து பார்த்து சொல்றேன் சித்ராக்கா..ஆனா 2 (அ) 3 வரமிளகாய்தான் கொஞ்சம் இடிக்குது..இந்த முறை வாங்கிய மிளகாய் சுத்த்த்த்தமா காரமே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்!

    • chitrasundar5 Says:

      காரமில்லாம சாப்பிடத்தான் இந்த சாம்பாரே 🙂

      இல்லையில்லை கொஞ்சம் காரம் இருந்தால்தான் நல்லா இருக்கும். இப்போதைக்கு நான் போடுவது 1/4 மிளகாய்தான், அவ்ளோஓஓ காரம்.


மறுமொழி இடுக‌