பலாக்கொட்டைகளை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால்தான் அதன் சுவை தெரியும்.அல்லது சாம்பார்,பொரியல்,குருமா போன்றும் செய்யலாம்.
பலாக்கொட்டையைத் தனியாகவோ அல்லது கத்தரிக்காய், மாங்காய், கேரட், முருங்கைக்காய் போன்ற காய்களில் ஒன்றுடனோ அல்லது எல்லா காய்களையும் சேர்த்தோ சாம்பார் வைக்கலாம்.நல்ல சுவையாக் இருக்கும்.
தேவையானப் பொருள்கள்:
துவரம் பருப்பு_1/2 கப்
பலாக்கொட்டை_12 எண்ணிக்கையில் (நாங்கள் வாங்கி வந்த பழத்தில் இருந்தது அவ்வளவுதான்)
மாங்காய்_1
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
புளி_கோலி அளவு
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம் (அ)கடுகு,உளுந்து,சீரகம்,வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு , பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
பலாக்கொட்டையின் மேல் தோலை எடுத்துவிட்டு நீரில் போட்டு ஊற வைக்கவும்.தோல் எடுக்கும்போது கவனமாக எடுக்கவும்.இல்லையென்றால் நகக்கண்ணில் பட்டுவிடும்.
ஒரு 10 நிமி ஊறினால் போதும்.அதன் மற்றொரு தோலையும் நகத்தால் சுரண்டி எடுத்துவிடலாம்.
மாங்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.
புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.வேண்டும் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
உப்பு,காரம் சரிப்பார்த்து மூடி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் பலாக்கொட்டைகளைப் போட்டு மூடி வேக வைக்கவும்.
நன்றாகக் கொதித்து பலாக்கொட்டைகள் பாதி வெந்த நிலையில் மாங்காய் துண்டுகளைப் போட்டு மூடி வேக வைக்கவும்.
இறுதியாக புளியைக் கரைத்து ஊற்றி கொதித்ததும் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி தூவி இறக்கவும்.தேங்காய்ப் பூ இல்லாவிடில் பரவாயில்லை.
இப்போது பலாக்கொட்டை& மாங்காய் சாம்பார் தயார்.
இது சாதம்,இட்லி,தோசை,பொங்கல் இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.
3:14 முப இல் ஜூலை 2, 2011
பலாக்கொட்டை ஸாம்பாரிலும், கூட்டுகளிலும் மிகவும் நன்றாகவே இருக்கும். மண் அடுப்புகளில்
சமையல் முடிந்த பின்னர் பலாக்கொட்டைகளைப் போட்டு இருக்கும் தணலால் மூடிவிட்டால் அதைஎடுத்து சாப்பிடும்போது அலாதி ருசியாக இருக்கும். அது பழைய காலம். பலாக்கொட்டையை
ஞாபகப்படுத்தி விட்டாய். இங்கு பழம் கிடைக்கிறதா என மருமகளைக் கேட்க வேண்டும். நான் எங்கும் வெளியில் போவதென்பதே கிடையாது.
9:12 பிப இல் ஜூலை 4, 2011
காமாட்சி அம்மா,
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
சமையல் முடிக்கும்வரையெல்லாம் பொறுமை கிடையாது.அது ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும் இது ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கும். வீட்டிலேயே பலா மரங்கள் இருந்ததால் பழத்திற்கு பஞ்சமில்லை.
கிழங்கு வகைகள், வேர்க்கடலை,பலாக்கொட்டை,கம்பு,கேழ்வரகு இவை பச்சையாக இருக்கும்போதே சுட்டு சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.அதிலும் பச்சைக்கம்பில் அவல் இடித்து வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவோம்.அதன் சுவையே தனிதான்.
இங்கு எங்களுக்கு Farmers market லிருந்து பலாப்பழம் கிடைக்கும். அதுவும் ஒருசில வாரங்கள்தான் வரும்.உங்களுக்கு fresh ஆக கிடைக்கவில்லையென்றால் can food இருக்கிறதா என்று பாருங்கள்..இப்பொழுது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?
7:46 முப இல் ஜூலை 10, 2011
நான் ஜெனிவாவில் இருக்கிறேன். உன்னுடைய குறிப்புகள் பார்க்கும் போது நினைத்துக் கொள்வேன்.நல்ல தோப்பும் , துறவுமாய் இயற்கைப் பொருட்கள் கிடைக்கும் இடத்தில் இருந்திருக்கிராய் என்று. அதனால்தான் ருசி அலாதியாகத் தெறிகிறது. எதுவும் கிடைக்காததே கிடையாதே.. இங்கும் ஸீஸனில் தேடினால் எல்லாம் கிடைக்கும்.. உன் பகிர்வுக்கு மிக்க ஸந்தோஷம்..
தொடர்ந்து பார்க்கலாமம்மா.
11:03 பிப இல் ஓகஸ்ட் 16, 2011
காமாட்சி அம்மா,
நான் உங்கள் கருத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டேன்.ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் இருந்திருப்பேன்.
ஜெனிவாவில் இருக்கீங்களா! நல்லது அம்மா! மீண்டும் சந்திப்போம்.