தேவையானப் பொருள்கள்:
உளுந்து_ 2 கப்
சின்ன வெங்காயம்_ 10
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்_ஒரு துளி
கறிவேப்பிலை_கொஞ்சம்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.
உளுந்து நன்றாக ஊறியதும் கழுவிவிட்டு,நீரை வடித்துவிட்டு குறைந்தது 1/2 மணி நேரமாவது ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
உளுந்து அரைக்க ஃப்ரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் மாவு நிறைய காணும்.
பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டு லேசாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
அரைக்கும்போதே பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.
இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும்.குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.
மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.அதேசமயம் பஞ்சுபோல் இருக்க வேண்டும்.
நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.
இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி, பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக அடித்து + கொடப்பி பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.
எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.
மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.
இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு:
வடைக்கு தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுந்து இரண்டையுமே பயன்படுத்தலாம்.
எனினும் தோல் உளுந்து வெள்ளை உளுந்தைவிட நன்றாக இருக்கும்.
மிக்ஸியைவிட கிரைண்டரில் அரைத்தால்தான் வடை நன்றாக இருக்கும்.
6:51 முப இல் ஏப்ரல் 1, 2014
மனைவி பள்ளிக்குச் சென்றிருநது நான் மட்டும் வீட்டிலிருந்த ஒரு நாளில் நானாக முயற்சித்து செய்தேன். உளுந்து வடையும், தேங்காய்ச் சட்னியுமாக வரவேற்க அசந்து விட்டாள். இது போன்ற சுவையான, மிருதுவான வடையை இதுவரை சாப்பிட்டதேயில்லை என ஏகத்துக்குப் பாராட்டு. நாங்களும் சமைப்போமில்ல என்று நிருபித்தாகி விட்டது. அக்காவுக்கு நன்றிகள்.
எனது நண்பரது அண்ணி இதனைக் கேட்டு தனது பள்ளியில் சொல்ல, ஒரு ஆசிரியையின் கணவர் மறுநாள் அவரைப் பார்த்து மிகச் சந்தோசமாக தனது மனைவி சுட்ட வடையை பாராட்டிப் பேசி டிப்ஸ் தந்தமைக்கு நன்றி தெரிவித்தாராம். எங்களிடம் அண்ணி சந்தோசமாக தெரிவித்தார். நாங்கள் சொன்னோம் “எல்லாப் புகழும் சித்ராக்காவிற்கே”. எத்தனை நபர்களை தங்களது எழுத்து மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. இது தானே எழுத்தின் வெற்றி என்பது!
2:04 பிப இல் ஏப்ரல் 1, 2014
சாக்பீஸ்,
வடையை செய்து பார்த்தது மட்டுமல்லாமல், வந்து பின்னூட்டம் கொடுத்ததில் மகிழ்ச்சி, அதைவிட மனைவிக்கு செய்து கொடுத்தது இன்னும் சந்தோஷம்.
புகழெல்லாம் வேண்டாங்கோ, நாளை உதவுமே என எங்க பாப்புவுக்காக எழுதி வைத்தது, உங்களைப் போன்றவர்களுக்கும் உதவினால் சந்தோஷமே ! மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதில் எனக்கும் மகிழ்ச்சிங்க.