ஜவ்வரிசி & சேமியா பாயசம்

 

20150501_170725

தேவையானவை :

ஜவ்வரிசி _ கால் கப்
சேமியா _ கால் கப்
சர்க்கரை _ அரை கப் (உங்களின் இனிப்புக்கேற்ப)
பால் _ அரை கப்
ஏலக்காய் _ ஒன்று

அலங்கரிக்க :

நெய் _ முந்திரி & திராட்சையை வறுக்குமளவு
முந்திரி _ 5
திராட்சை _ 5
குங்குமப்பூ _ நான்கைந்து இதழ்கள் (இல்லையென்றாலும் பரவாயில்லை)

செய்முறை :

வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் ஜவ்வரிசியைப் போட்டு தீய்ந்துவிடாமல் வறுக்கவும். வறுக்கும்போதே நமக்குத்தெரியும் ஜவ்வரிசி உருண்டுருண்டு அளவில் கொஞ்சம் பெரிதாகும். வறுபட்டதும் இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.

அது முடிந்ததும் சேமியாவைப் போட்டு சூடுவர வறுத்துக்கொள்ளவும்.

ஒரு கனமான பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி காய்ந்ததும் ஜவ்வரிசியைக் கழுவி சேர்க்கவும்.

அது நன்றாக‌ வெந்து வரும்போது சேமியாவை சேர்க்கவும். (இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் சேமியா முதலில் வெந்து குழைந்துவிடும்)

இரண்டும் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து கரைந்ததும், பாலைச் சேர்த்து கிண்டிவிட்டு, தேவையானால் தண்ணீர் சேர்த்து, குங்குமப்பூ, பொடித்த‌ ஏலக்காய் சேர்த்து இறக்கி, நெய்யில் முந்திரி & திராட்சையை வறுத்து சேர்க்கவும்.

20150501_162557

பாயசத்தைத் தனியாக மட்டுமல்லாமல், உளுந்து வடை அல்லது அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட ஆஹா என்றிருக்கும் !

சூடாக இருக்கும்போது நீர்த்து இருக்கும், ஆற ஆற இறுகி கெட்டியாகும். எனவே கொஞ்சம் நீர்க்க‌ செய்வ‌து நல்லது.

இதனை வெறும் ஜவ்வரிசியை வைத்தோ அல்லது சேமியாவை மட்டுமே வைத்தோகூட செய்யலாம்.

இனிப்பு வகைகள், பாயசம் இல் பதிவிடப்பட்டது . 3 Comments »

தினை அதிரசம்

20150915_161044

எங்கள் ஊரில் அதிரசம் இல்லாமல் தீபாவளி இருக்காது. அதிலும் தினை அதிரசம்தான் செய்வார்கள். அப்போதெல்லாம் இதை செய்வது மிகப் பெரிய வேலை. இப்போதுபோல் தோல் நீக்கிய தினை கிடைக்காது.

பம்ப்செட் இல்லாதவர்கள், தங்கள் நிலத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் சும்மா மானாவாரியாக தினையை விதைத்து அறுவடை செய்திருப்பார்கள். தீபாவளி சமயத்தில் அதிரசம் செய்யவேண்டி அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்கள் வீட்டை நோக்கிப் படையெடுப்பார்கள்.

அதை வாங்கிவந்து உரலில் போட்டு மாங்குமாங்குனு குத்தி தோலை நீக்கி, (இதற்கு ஏழு தோல் இருக்குமாம், சொல்லுவாங்க) ஊறவச்சு, பிறகு குத்தி குத்தி சலித்து மாவாக்கி, வெல்லபாகு வச்சு கிண்டி, அதிரசம் செய்வாங்க.

தினையை நாங்களும் குத்தியே தீருவோம்னு நானும் என் தம்பியும் விழுந்து & புரண்டு அழுததையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

அரிசி போல் இல்லாமல் தினையில் செய்யும்போது கொஞ்சம் சாஃப்டா, பொலபொலனு இருக்கும். இதுல செஞ்சாதான் தீபாவளி தீபாவளியா தெரியும்.

நாட்கள் செல்லச்செல்ல எல்லோரது வீட்டுக்கும் வந்த மருமகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக தினையிலிருந்து அரிசிக்குத் தாவிவிட்டனர்.

சின்ன வயசுல தினையைப் பார்த்ததோடு சரி, மறந்தே போயிட்டேன். இங்கு வந்த புதுசுல இந்த ஊர் கடையில் தானியங்கள் இருக்கும் பகுதியில் தினை மாதிரியே ஒன்று இருக்கவும் வாங்கி வந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், வரவில்லை. பிறகுதான் தெரிந்தது அது கஸ்கஸ் என்று :)))) இந்த பெயரில் இப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும் !

20150918_142039

நீண்ட நாட்களாகவே சிறுதானியங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். இப்போது இங்குள்ள ஒரு கடையில் எல்லா சிறுதானியங்களும் கிடைக்கிறது. அதில் தினை இருக்கவும் வாங்கிவந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், நன்றாக வந்துள்ளது. நீங்களும் ஒன்று எடுத்து சாப்பிட்டுப் பாருங்க !

20150915_163204

தேவையானவை:

தினை _ 2 கப்

வெல்லம்_ சுமார் 2 கப் அல்லது வெல்லத்தின் இனிப்புக்கேற்ப‌

ஏலக்காய் _1

உப்பு _ துளிக்கும் குறைவாக. ருசியைக்கூட்ட போடுகிறோம். விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.

எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

மாவு தயாரிப்பது, செய்முறை எல்லாமும் அரிசிமாவு அதிரசம் மாதிரியேதான்.

தினையை நன்றாகக் கழுவி ஊற வைக்கவும்.

ஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக மைய பொடித்துக்கொள்ளவும். இப்போதே ஏலக்காயையும் சேர்த்து பொடித்துக்கொள்ளலாம்.

ஒரு கெட்டியான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு & மண் போக வடிகட்டியில் வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.

வெல்லம் கொதித்து கெட்டிப் பாகாக வரும்போது ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு, ஒரு துளி பாகை அதில் விட்டு கையால் உருட்டினால் கரையாமல் கெட்டியாக உருட்ட‌  வர‌வேண்டும்.

அந்த நேரத்தில் அப்பாகை எடுத்து தினை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டிக்காம்பால் அல்லது மத்தின் அடிப்பகுதியால் விடாமல் கிண்ட வேண்டும். ஊற்றும்போது கவனம் தேவை.

பாகின் சூட்டிலேயே மாவு வெந்துவிடும்.

கை விடாமல் நன்றாகக் கிண்டி ஆறியதும் மூடி வைத்து, அடுத்த நாளோ, இல்லை அதற்கும் அடுத்த நாளோ அதிரசங்களைச் சுடலாம். அன்றேகூட செய்யலாம். எங்க அம்மா மாவு கிண்டி வைத்து அதிரசம் சுட ஒரு வாரமாவது ஆகும், அதற்குள் பாதி மாவைக் காலி பண்ணிடுவோம் 🙂

எண்ணெயை அடுப்பில் ஏற்றி காய வைக்கவும்.

20150915_161616

ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் அல்லது பேப்பர் டவலில் சிறு உருண்டை அளவிற்கு மாவை எடுத்து படத்தில் உள்ளதுபோல் தட்டிக்கொண்டு எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரித்தெடுக்கவும்.

எண்ணெய் ரொம்பவும் சூடாக இருக்கக் கூடாது. தீயுமே தவிர உள்மாவு வேகாது. எண்ணெய் குலோப் ஜாமூன் சுடும் பதமாக இருக்கலாம்.

எடுத்தபின் ஒரு தட்டில் வைத்து அடிப்பக்கம் தட்டையான ஒரு கிண்ணத்தால் அழுத்தினால் உப்பியிருக்கும் அதிரசம் தட்டையாகிவிடும்.

எல்லா மாவையும் இப்படியே செய்ய வேண்டியதுதான்.

20150915_163847

பிறகென்ன, ஆறியதும் எடுத்து சாப்பிட்டு விடுவதோ அல்லது எடுத்து வைத்து பிறகு சாப்பிடுவதோ எல்லாமும் உங்கள் கைகளில்.

ஈஸி சர்க்கரை அதிரசம்

20141226_132223

உங்களுக்குத்தான், எடுத்துக்கோங்க !

ஈஸி அதிரசம்னா பச்சரிசி இல்லாமலோ !!!! , அல்லது சர்க்கரை இல்லாமலோ !!!! இப்படித்தானே எண்ணத் தோன்றும். இவை எல்லாமே உண்டுங்க. ஆனால் முக்கியமான ஒண்ணு, அதாங்க நாமெல்லாம் பார்த்து பயப்படுவோமே, சில சமயங்களில் வரும், பல சமயங்களில் சொதப்புமே, அது அது அதேதான். பாகு காய்ச்ச வேண்டிய அவசிய‌ல்லை. அப்பாடா, இப்போ நிம்மதி பெருமூச்சு விட்டாச்சா ! இனி அடிக்கடி அதிரசம் செய்து சுவைக்கலாம், வாங்க‌ !!

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு அளவு
சர்க்கரை _ பாதி அளவு
ஏலக்காய் _ ஒன்றிரண்டு
உப்பு _ கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு துளியூண்டு

20141226_124022

நான் எடுத்த அளாவு

செய்முறை :

பச்சரிசியை நன்றாகக் கழுவிவிட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.

ஊறிய பிறகு தண்ணீர் முழுவதையும் சுத்தமாக வடித்துவிடவும். அரிசியில் தண்ணீர் துளியும் இருக்க வேண்டாம்.

பிறகு அரிசியை மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காயையும் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும். சமயங்களில் கடைசியில் ஏலக்காயை சேர்க்க மறந்துவிடுவதால் இந்த ஐடியா. புட்டு, இடியாப்பம் என எல்லாவற்றுக்கும் இப்படியே இடித்துக்கொள்கிறேன்.

மாவை ஒரு எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் சர்க்கரையையும், உப்பையும் போட்டு கை விடாமல் ஒரு கரண்டியால் நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.

அடுத்த நாள் மாவை கையால் நன்றாகக் கிளறிவிட்டு பிசையவும். அதிரசம் செய்யும் பதத்திற்கு மாவு வந்துவிடும். ஈர மாவுடன் சர்க்கரை சேர்ந்து சிறிது நீர் விட்டுக்கொண்டு பதமாக இருக்கும்.

அப்படி ஈரம் பத்தவில்லை எனில் அரை ஸ்பூன் அளவிற்கு சுடுதண்ணீர் தெளித்து பிசையவும். டபக்கென நீறை ஊற்றிவிட வேண்டாம். பார்த்து தேவையானால் மட்டுமே சேர்க்கவும்.

பாகு காய்ச்சுவது, பாகு பதம் பார்ப்பது என பிரச்சினையில்லாமல் அதிரச மாவு தயார்.

IMG_5406

வாணலில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி காயவைக்கவும். வடை போடும் அளவிற்கெல்லாம் எண்ணெய் ரொம்பவும் சூடாகக் கூடாது.

சிறு உருண்டை அளவிற்கு மாவை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து அழுத்தாமல் உருண்டையாக்கி ஒரு ப்ளாஸ்டிக் அல்லது வாழையிலையில் வைத்துத் தட்டவும். இந்த மாவு எவ்வளவு மெல்லியதாக வேண்டுமானாலும் தட்ட வருகிறது.

20141226_130350

எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு, (நன்றாக பூரிபோல் இரண்டு பக்கமும் உப்பிக்கொண்டு வரும்) ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பிப்போட்டு மறுபக்கமும் சிவந்ததும்(சர்க்கரை சேர்ப்பதால் அந்தளவிற்கு சிவக்காது) எடுத்து அடிப்பக்கம் தட்டையான ஒரு தட்டில் போட்டு அடிப்பக்கம் தட்டையான ஒரு கிண்ணத்தால் அதிரசத்தை அழுத்தவும்.

மீதமான எண்ணெய் வெளியேறிவிடும். இந்த மாவு எண்ணெய் குடிக்கவில்லை. இருந்தாலும் அழுத்தினால்தான் எல்லாம் ஒன்றுபோல் அழகாக இருக்கும்.

செய்து சாப்பிட்டுப் பார்த்து, வந்து சொல்லுங்க !

அதிரசம், இனிப்பு வகைகள் இல் பதிவிடப்பட்டது . 14 Comments »

கருப்பட்டி பொங்கல் & பால் பொங்கல்

 

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!

IMG_3678

 

மகளின் ‘ஜேப்பனீஸ் குக்கிங்’கிற்காக ‘தாய் ஸ்டிக்கி ரைஸ்’ வாங்க ஆரம்பித்து, பிறகு அடிக்கடி வாங்கிவிடும்படி ஆகிவிட்டது. ஸ்டிக்கியாக இருக்கும் இது நல்ல வாசனையுடன் சுவையும் அலாதியாக இருக்கும். வெறும் சாதத்தையே இரண்டு பேரும் போட்டிபோட்டு சாப்பிட்டுவிடுவோம்.

இந்த அரிசியை வைத்து எளிய முறையில் ஒரு இனிப்புப் பொங்கல் செய்வோம். விருப்பமானால் நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்துக்கொள்ளுங்கள். ஏலக்காய் சேர்ப்பதானாலும் இற‌க்கும்போது பொடியாக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.

என்னைக்கேட்டால் பனை வெல்லம் & தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் இது எதுவுமே தேவையில்லை என்பேன். நம் வீட்டில் உள்ள சாதாரண பச்சரிசியிலும் செய்யலாம்.

எங்க வீட்டில் பெரும் பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலும், பால் பொங்கலும் செய்வாங்க. முதலில் சர்க்கரைப் பொங்கலைப் பார்ப்போம்.

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு கப்
பனைவெல்லம் _ 3/4 கப்
தேங்காய் பால் _ 3/4 கப்
உப்பு _ துளிக்கும் குறைவாக‌

செய்முறை:

அரிசியைக் கழுவிவிட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஊறிய அரிசியை தண்ணீருடனே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ வைத்து குழையாமல் fluffy  யாக‌ வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பனைவெல்லத்தைப் பொடித்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து வந்ததும் மண் & தூசு இல்லாமல் வடிகட்டி அதை ஒரு வாணலில் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள சாதத்தை இதில் கொட்டி விடாமல் கிண்டவும்.

எல்லாம் சேர்ந்து இறுகி வந்ததும் இறக்கவும். இதை அலங்கரிப்பது உங்கள் விருப்பம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பால் பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு கப்
பால் _ 1/4 கப்
வெல்லம்_சிறு துண்டு

செய்முறை:

ஒரு கப் அரிசி வேகுமளவு பாலும் தண்ணீருமாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றவும். அரிசியைக் கழுவி வைத்துக்கொள்ளவும்.

பால் சேர்ப்பதால் தண்ணீர் பொங்கி வெளிவரும். அந்த நேரத்தில் அரிசியைப் போட்டுக் கிண்டிவிட்டு அது வேகும்வரை இடையிடையே கிண்டிவிட்டு வெந்ததும் இறக்கவும்.

சாமிக்குப் படைக்கும்போது சாதத்தின்மேல் சிறு துண்டு வெல்லம் வைத்து படைப்பாங்க‌. வெறும் பால் பொங்கலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

இனிப்பு வகைகள், சாதம், பொங்கல் வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 6 Comments »

கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் / Black rice sweet pongal

pongal

நாளை ஆடி 18 ம் பெருக்குக்கு சூப்பர் சுவையில், கொஞ்சம் வித்தியாசமான சர்க்கரைப் பொங்கல் செய்து கொண்டாடுவோமே!!

தேவையானவை:

கருப்பரிசி _ ஒரு கப்
பச்சைப் பருப்பு _ 1/4 கப்
உப்பு _ துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)
வெல்லம் _ ஒரு கப்
பால்_1/4 கப்
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
நெய்_2 டேபிள்ஸ்பூன்
முந்திரி _ 10
ஏலக்காய்_1

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

பருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, பெயருக்கு துளிக்கும் குறைவாக உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும்.

நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி,வெல்லம் கரைந்ததும், மண் & தூசு போக வடிகட்டிவிட்டு, மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.

பிறகு தேங்காய்ப் பூ, பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

அடுத்து நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறிக்கொடுத்து இற‌க்கவும். இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.

pongal

கடைசியில் ஒரு சிறு குறிப்பு:

நெய்யில் முந்திரியை வறுத்துக்கொண்டு அதிலேயே பொங்கலைக் கொட்டிக் கிளறி எடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும். அது வேறொன்றுமில்லை, நெய் முழுவதும் சேர்வதால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.

பொரி மாவு / Pori maavu

pori maavupori maavu

இதை செய்வது சுலபம், சுவையோ அதிகம். எவ்வளவு இனிப்பு வகைகளை சுவைத்தாலும் இதன் சுவையே தனிதான்.

எங்கம்மா ஒரு பெரிய இரும்பு வாணலை வைத்து பொரிப்பாங்க,எல்லா அரிசியும் பூ மாதிரி பொரிந்து இருக்கும். இங்கே நான் பொரித்துள்ள அரிசிகூட சரியாகப் பொரியாமல்தான் உள்ளது.

குட்டீஸ்களுக்கு கொடுக்கும்போது மாவு புரை ஏறும் என்பதால் நெய் அல்லது நல்லெண்ணெயில் பிசைந்து கொடுக்கலாம்.

இதையே மாவாக அரைக்காமல் கொஞ்சம் ரவை பதத்துடன் அரைத்து சூப்பரான அரிசி உருண்டை செய்யலாம்.

தேவையானவை:

புழுங்கல் அரிசி _ ஒரு டம்ளர் அளவிற்கு
சர்க்கரை _ தேவைக்கு
ஏலக்காய் _ 1
உப்பு _ துளிக்கும் குறைவாக (ருசியைக் கூட்டத்தான்)

செய்முறை:

ஒரு அடிகனமான  வாணலை அடுப்பில் ஏற்றி நன்றாக சூடு ஏறியதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசியைப் போட்டு தோசைத் திருப்பியின் உதவியால் விடாமல் கிண்டிவிடவும்.

சிறிது நேரத்தில் அரிசி படபடவென பொரியும்.விடாமல் கிண்டவும். இப்போது பூ மாதிரி பொரிந்து வரும்.எல்லா அரிசியும் பொரிந்ததுபோல் தெரியும்போது ஒரு அகலமானத் தட்டில் எடுத்துக்கொட்டி ஆறவிடவும்.இங்கு கொஞ்சம் ஏமாந்தால் அரிசி தீய்ந்துவிடும்.அதனால் கவனம் தேவை.

இதேபோல் தொடர்ந்து எல்லா அரிசியையும் பொரித்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.

அரிசி நன்றாக ஆறியதும் மிக்ஸியில் கொட்டி அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்,உப்பு இவற்றையும் போட்டு மைய மாவாக்கி, இனிப்பு போதுமா என சுவை பார்த்து, தேவையானால் மேலும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அரைத்து, இனிப்பு அதிகமாக இருந்தால்…கூடுதல் சந்தோஷம்தான்!!  ஒரு அகலமான தட்டில் கொட்டி மீண்டும் ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சுவைக்கலாம்.

பானகம் / Paanagam

paanagam

எங்கள் வீட்டு கொல்லியில் அப்போது சிறியதும்,பெரியதுமாக இரண்டு எலுமிச்சை மரங்கள் இருந்தன.நிறைய காய்கள் காய்க்கும்.பழங்களை பறித்து வந்து ஊறுகாய் போடுவாங்க,அக்கம்பக்கம்,எதிர்த்தவீடு என எல்லோருக்கும் கொடுப்பாங்க. கிராமத்தில் பெரும்பாலும் எல்லாப் பொருள்களையும் இப்படித்தான் பறிமாறிக் கொள்வார்கள்.

யாரும் யாரிடமும் காசு கொடுத்து வாங்குவது கிடையாது.யார் வீட்டில் என்ன அறுவடை என்றாலும் உறவுகள், தெரிந்தவர்கள் (ஊர் முழுவதுமே தெரிந்த‌வர்கள்தான்) என எல்லோருக்கும் கொடுத்தனுப்புவார்கள்.இப்போது  இதெல்லாம் இருக்கிற மாதிரி தெரியவில்லை.

எங்கள் ஊரில் பங்குனி உத்திரம் சிறப்பாக,வெகு விமரிசையாக‌ நடைபெறும். நல்ல வெயில் நேரத்தில் காவடி எடுத்து வருவார்கள்.அந்த சமயம் எங்கள் வீட்டில் நிறைய எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து பானகம் செய்து இரண்டுமூன்று பெரியபெரிய‌ அண்டாக்களில் ஊற்றி வைத்து காவடி எடுத்து வருகிற எல்லோருக்கும் கொடுப்பாங்க.அதென்னமோ அன்றுமட்டும் எனக்கு அந்த பானகம் சூப்பர் சுவையாக இருப்பதுபோல் தெரியும்.

நான் எப்போது பானகம் செய்தாலும் இந்த நினைவு வராமல் போகாது. இவை ஆரம்பப் பள்ளி நாட்கள்தான் என்றாலும் இன்னும் பசுமை மாறாமல் இருப்பதுதான் அதன் சிறப்பு.

இன்று இவர் லன்சுக்கு  வெளியில் (பிடிக்காமல்தான், வேறு வழியில்லை) சாப்பிடப் போயிருக்கிறார்.நானும் பொண்ணும் மட்டுமே வீட்டில். சாப்பாட்டு வேளையெல்லாம் தலைகீழாகிவிட்டது. இந்த மதிய நேரத்தில் பானகம் போட்டு குடிச்சாச்சு. ம்ம்ம்..சாப்பாடு?…இரண்டு மணிக்குமேல் ஆப்பம் & தேங்கய்ப்பால். மாலைதான் ஃபுல் மீல்ஸ். அதுவரை எஞ்ஜாய் சித்ரா!

நினைவுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பானகம் செய்வதைப் பார்ப்போமே! படத்திலுள்ள பழத்தில் அந்தளவிற்கு புளிப்பு இருக்காது.எனவே ஒரு பழத்தில் இரண்டு க்ளாஸ் பானகம் செய்தேன்.நம்ம ஊர் பழம் என்றால் புளிப்பு அதிகமாக இருக்கும்.அதனால் புளிப்புக்குத் தகுந்தாற்போல் வெல்லம் & தண்ணீரின் அளவைக் கூட்டிக்கொள்ளவும்.

நான் சேர்த்திருப்பது வெள்ளை வெல்லம் என்பதால் பானகத்தின் நிறம் ப்ரௌன் நிறத்தில் இல்லாமல் கம்மியாக உள்ளது.சாதாரண வெல்லம் அல்லது பனை வெல்லம் சேர்த்தால் சூப்பர் நிறத்தில் இருக்கும்.

தேவையானவை:

எலுமிச்சம் பழம்_ 1
வெல்லம் / பனை வெல்லம் _ ஒரு துண்டு
தண்ணீர்_ இரண்டு டம்ளர் அளவிற்கு
சுக்குத்தூள்_ ஒரு துளிக்கும் குறைவாக
ஏலக்காய் தூள்_ துளிக்கும் குறைவாக‌
உப்பு _ துளிக்கும் குறைவாக (சும்மா பெயருக்குத்தான், சுவைக்கூட்ட)

செய்முறை:

எலுமிச்சம் பழத்தை விதைகள்,திப்பி இல்லாதவாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

வெல்லத்தைப் பொடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து கல், மண் இல்லாமல் வடிகட்டிக்கொள்ளவும்.

இந்த வெல்லத் தண்ணீரில் சுக்குத்தூள்,ஏலத்தூள்,உப்பு,எலுமிச்சை சாறு விட்டு காஃபி ஆத்துவதுபோல் ஆத்தி இரண்டு டம்ளர்களில் ஊற்றி சுவைத்து குடிக்க வேண்டியதுதான்.

வெயிலுக்கு சுகமாக இருக்கும்.

இனிப்பு வகைகள், பானகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 20 Comments »

மாங்காய் இனிப்பு பச்சடி / Mango sweet pachadi

mango pachadi

இனிப்பு,காரம்,புளிப்புடன் பச்சைப் பயறும் சேர்ந்திருப்பதால் இந்தப் பச்சடியின் சுவை சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே!

mango

இங்கு எப்போதும் பழ மாங்காய் மாதிரியேதான் கிடைக்கும். ஒருசில சமய‌ங்களில் மட்டும் நம்ம ஊரில் உள்ளது மாதிரி நல்ல காய் மாங்காவாகக் கிடைக்கும். இவை சாம்பார், fish & dry fish குழம்பு, பச்சடி போன்றவை செய்ய நன்றாக இருக்கும். இப்போது இந்த மாங்காய்கள் வந்துகொண்டிருப்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமே !!

தேவையானவை:

மாங்காய்_ 1
பச்சைப் பயறு_ 1/4 கப்
பெருங்காயம்_துளிக்கும் குறைவாக‌
வெல்லம்_ ஒரு கப்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_துளியளவு
உப்பு_துளியளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து

செய்முறை:

மாங்காயைக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ள‌வும்.

ஒரு பாத்திரத்தில் பச்சைபயறுடன் மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து பயறு வேகுமளவு தண்ணீர் ஊற்றி குழையாமல், மலர வேக வைக்கவும்.

பயறு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கிண்டிவிட்டு மாங்காய் வேகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது கரையும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு,மண் இல்லாமல் வடிகட்டி வெந்த மாங்காய் பருப்புடன் சேர்த்துக் கிண்டிவிட்டு எல்லாம் சேர்ந்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி, கடுகு,உளுந்து தாளித்துக்கொட்டி கிளறி விடவும்.

 

mango pachadi

 
இப்போது இனிப்பு,புளிப்பு, காரம் கல‌ந்த மாங்காய் பச்சடி சாப்பிடத் தயார்.

 

பீனட் பட்டர் குக்கீஸ் / Peanut butter cookies

cookie

இன்னும் பட்டர்,சர்க்கரை சேர்க்க விரும்பினால் நீண்ட‌ புள்ளிகளுக்கு அப்பாலுள்ள அளவின்படி சேர்க்கலாம்.

தேவையானவை:

மைதா _ 2 கப்
பேகிங் சோடா / Baking soda _ 1/2 டீஸ்பூன்
உப்பு _ 1/4  டீஸ்பூன்

பட்டர் / Unsalted butter _ 1/2 கப் …… ………………………………………..( 3/4 கப்)
ப்ரௌன் சுகர் / Brown sugar _ 1/2 கப்
சர்க்கரை_1/4 கப்……………………………………………………………………. (1/2 கப்)
பீனட் பட்டர் / Crunchy Peanut butter _ 1/2 கப் ……………………………(3/4 கப்)
முட்டை_1
வென்னிலா எக்ஸ்ராக்ட் / Pure vanilla extract _  ஒரு டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மைதா,பேகிங் சோடா,உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து ஒன்றுக்கு இரண்டு தடவை சலித்துக்கொள்ளவும். அப்போதுதான் பேகிங்சோடா மாவுடன் நன்றாகக் கலந்துகொள்ளும்.

ஒரு பெரிய பௌளில் பட்டரை எடுத்துக்கொண்டு விஸ்க்கால் மென்மையாகும்வரை கலக்கவும்.

அடுத்து இரண்டு விதமான‌ சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

இவை நன்றாகக் கலந்ததும் பீனட் பட்டரை சேர்த்து கலக்கவும்.

பிறகு முட்டை,வென்னிலா எக்ஸ்ராக்ட் சேர்த்து நன்கு கலக்கவும்.

கடைசியாக‌ மைதா கலவையை சேர்த்து நன்றாகக் கலந்து மூடி ஒரு 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

ஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

cookie

ஒரு baking sheet ல் parchment paperஐ  போட்டு மாவில் இருந்து சிறுசிறு உருண்டை அளவிற்கு எடுத்து மென்மையாக உருட்டி படத்தில் உள்ளதுபோல் போதுமான இடைவெளி விட்டு அடுக்கவும்.

ஒரு ஃபோர்க் ஸ்பூனில் சர்க்கரையைத் தொட்டு ஒவ்வொரு உருண்டையின் மீதும் வைத்து லேஸாக அழுத்திவிடவும்.

இதனை முற்சூடு செய்யப்பட்ட ஓவனில் 10 லிருந்து 15 நிமிடங்களுக்கு அல்லது குக்கியின் ஓரங்கள் லேஸாக சிவந்து வரும்வரை பேக் செய்து எடுத்து ஆறவிடவும்.

cookiecookie

இப்போது சுவையான,மொறுமொறுப்பான,இன்னும் என்னல்லாம் பில்டப் கொடுக்க‌லாம்!!,ம்ம்ம்…கரகரப்பான,க்ரன்சியான‌  பீனட்பட்டர் குக்கிகள் தயார்.

ஓட்ஸ் குக்கீஸ் / Oats cookies

oats cookie

இதுநாள் வரை கடையிலிருந்து வாங்கும் ‘ரெடிமேட் மிக்ஸ்’களைப் பயன்படுத்தியே கேக்,குக்கீஸ் செய்வேன்.

இந்த முறை இங்கும் அங்கும் தேடியலைந்து  ஓட்ஸ் குக்கி செய்தேன்,சூப்பராக வந்தது.

ஓட்ஸை அப்படியே போட்டு செய்ததே வாசனையுடன் சுவையாக‌ வரும்போது,வறுத்துப் பொடித்து செய்தால் என்ன எனத் தோன்றுகிற‌து.மேலும் வெண்ணெய்,சர்க்கரையின் அளவுகளைக் கொஞ்சம் குறைத்து செய்து பதிவிடுகிறேன்.

என்னிடம் electric mixer இல்லை என்பதால் whisk & கையைப் பயன்படுத்திக்கொண்டேன்.

சேர்க்க வேண்டிய பொருள்களை தனித்தனியாக கோடு போட்டுள்ளேன். அதன்படி பிரித்து வைத்துக்கொண்டால் சேர்க்க எளிதாக இருக்கும்.

தேவையானவை:

மைதா_3/4 கப்
பேகிங் சோடா_1/2 டீஸ்பூன்
உப்பு_1/2 டீஸ்பூன்
______  _  _  _  _________
வெண்ணெய்/Unsalted butter_1/2 கப்
ப்ரௌன் சுகர்/Brown sugar_3/4  கப் (ப்ரௌன் சுகர் கைவசம் இல்லாததால் raw cane sugar சேர்த்திருக்கிறேன்.)
____________  _  _  _  ___________
முட்டை_1
Pure vanilla extract_ஒரு டீஸ்பூன்
_________________  _  _  _   _____________________
ஓட்ஸ்_3 கப்
விருப்பமான நட்ஸ்/Nuts_ஒரு கை
விருப்பமான ட்ரை ஃப்ரூட்ஸ்/Dry fruits_ஒரு கை
சாக்லெட் சிப்ஸ்/Chocolate chips_ஒரு கை

நான் ஓட்ஸுடன் உலர் திராட்சையும்,’சாக்லெட் சிப்’பும் சேர்த்திருக்கிறேன்.
___________  _  _  _   ____________________

செய்முறை:

மைதா,பேகிங் சோடா,உப்பு மூன்றையும் ஒரு பௌளில் கொட்டி விஸ்க்கால் நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.

பயன்படுத்தும் பட்டர் அறை வெப்பநிலையில் இருக்கட்டும்.பட்டர் மென்மையாகும்வரை  நன்றாக விஸ்க்கால் கலக்கவும்.

பிறகு அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் குழையும்வரை கலக்கவும்.

அடுத்து இதனுடன் முட்டை,vanilla extract இரண்டையும் சேர்த்து ஸ்மூத்தாக வரும்வரை நன்றாகக் கலக்கவும்.

இவற்றுடன் மைதா கலவையைக் கொட்டிக் கலக்கவும்.

எல்லாம் நன்றாக,ஒன்றாக சேர்ந்த பிறகு ஓட்ஸ்,நட்ஸ்,ட்ரை ஃப்ரூட்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து விஸ்க்கால் கலக்கிவிட்டு ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

ஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

ஒருமுறை கலவையை கையாலேயே மென்மையாகப் பிசைந்துகொள்ளவும்

ஒரு baking sheet ல் parchment paperஐ  போட்டு 1/4 கப் அல்லது ஒரு குழிவான கரண்டி அல்லது ice cream scoop அல்லது கையாலேயே சிறுசிறு எலுமிச்சை அளவுக்கு எடுத்து படத்தில் உள்ளதுபோல் தனித்தனியாக வைத்து லேஸாகத் தட்டையாக்கி விடவும்.

oats cookie

பிறகு தட்டை ஓவனில் வைத்து சுமார் 10 லிருந்து 12 நிமிடங்கள் பேக் செய்யவும்.குக்கியைச் சுற்றிலும் லேஸான ப்ரௌன் நிறம் வரும்போது எடுத்து ஆறவிடவும்.

மீதியுள்ள கலவையை மீண்டும் இவ்வாறே செய்யவும்.சுமார் 20 குக்கிகள் வரை வரும்.

இப்போது நல்ல கரகர,மொறுமொறு ஓட்ஸ் குக்கிகள் தயார்.கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சுவைக்கலாம்.