தினை அதிரசம்

20150915_161044

எங்கள் ஊரில் அதிரசம் இல்லாமல் தீபாவளி இருக்காது. அதிலும் தினை அதிரசம்தான் செய்வார்கள். அப்போதெல்லாம் இதை செய்வது மிகப் பெரிய வேலை. இப்போதுபோல் தோல் நீக்கிய தினை கிடைக்காது.

பம்ப்செட் இல்லாதவர்கள், தங்கள் நிலத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் சும்மா மானாவாரியாக தினையை விதைத்து அறுவடை செய்திருப்பார்கள். தீபாவளி சமயத்தில் அதிரசம் செய்யவேண்டி அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்கள் வீட்டை நோக்கிப் படையெடுப்பார்கள்.

அதை வாங்கிவந்து உரலில் போட்டு மாங்குமாங்குனு குத்தி தோலை நீக்கி, (இதற்கு ஏழு தோல் இருக்குமாம், சொல்லுவாங்க) ஊறவச்சு, பிறகு குத்தி குத்தி சலித்து மாவாக்கி, வெல்லபாகு வச்சு கிண்டி, அதிரசம் செய்வாங்க.

தினையை நாங்களும் குத்தியே தீருவோம்னு நானும் என் தம்பியும் விழுந்து & புரண்டு அழுததையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

அரிசி போல் இல்லாமல் தினையில் செய்யும்போது கொஞ்சம் சாஃப்டா, பொலபொலனு இருக்கும். இதுல செஞ்சாதான் தீபாவளி தீபாவளியா தெரியும்.

நாட்கள் செல்லச்செல்ல எல்லோரது வீட்டுக்கும் வந்த மருமகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக தினையிலிருந்து அரிசிக்குத் தாவிவிட்டனர்.

சின்ன வயசுல தினையைப் பார்த்ததோடு சரி, மறந்தே போயிட்டேன். இங்கு வந்த புதுசுல இந்த ஊர் கடையில் தானியங்கள் இருக்கும் பகுதியில் தினை மாதிரியே ஒன்று இருக்கவும் வாங்கி வந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், வரவில்லை. பிறகுதான் தெரிந்தது அது கஸ்கஸ் என்று :)))) இந்த பெயரில் இப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும் !

20150918_142039

நீண்ட நாட்களாகவே சிறுதானியங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். இப்போது இங்குள்ள ஒரு கடையில் எல்லா சிறுதானியங்களும் கிடைக்கிறது. அதில் தினை இருக்கவும் வாங்கிவந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், நன்றாக வந்துள்ளது. நீங்களும் ஒன்று எடுத்து சாப்பிட்டுப் பாருங்க !

20150915_163204

தேவையானவை:

தினை _ 2 கப்

வெல்லம்_ சுமார் 2 கப் அல்லது வெல்லத்தின் இனிப்புக்கேற்ப‌

ஏலக்காய் _1

உப்பு _ துளிக்கும் குறைவாக. ருசியைக்கூட்ட போடுகிறோம். விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.

எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

மாவு தயாரிப்பது, செய்முறை எல்லாமும் அரிசிமாவு அதிரசம் மாதிரியேதான்.

தினையை நன்றாகக் கழுவி ஊற வைக்கவும்.

ஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக மைய பொடித்துக்கொள்ளவும். இப்போதே ஏலக்காயையும் சேர்த்து பொடித்துக்கொள்ளலாம்.

ஒரு கெட்டியான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு & மண் போக வடிகட்டியில் வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.

வெல்லம் கொதித்து கெட்டிப் பாகாக வரும்போது ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு, ஒரு துளி பாகை அதில் விட்டு கையால் உருட்டினால் கரையாமல் கெட்டியாக உருட்ட‌  வர‌வேண்டும்.

அந்த நேரத்தில் அப்பாகை எடுத்து தினை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டிக்காம்பால் அல்லது மத்தின் அடிப்பகுதியால் விடாமல் கிண்ட வேண்டும். ஊற்றும்போது கவனம் தேவை.

பாகின் சூட்டிலேயே மாவு வெந்துவிடும்.

கை விடாமல் நன்றாகக் கிண்டி ஆறியதும் மூடி வைத்து, அடுத்த நாளோ, இல்லை அதற்கும் அடுத்த நாளோ அதிரசங்களைச் சுடலாம். அன்றேகூட செய்யலாம். எங்க அம்மா மாவு கிண்டி வைத்து அதிரசம் சுட ஒரு வாரமாவது ஆகும், அதற்குள் பாதி மாவைக் காலி பண்ணிடுவோம் 🙂

எண்ணெயை அடுப்பில் ஏற்றி காய வைக்கவும்.

20150915_161616

ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் அல்லது பேப்பர் டவலில் சிறு உருண்டை அளவிற்கு மாவை எடுத்து படத்தில் உள்ளதுபோல் தட்டிக்கொண்டு எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரித்தெடுக்கவும்.

எண்ணெய் ரொம்பவும் சூடாக இருக்கக் கூடாது. தீயுமே தவிர உள்மாவு வேகாது. எண்ணெய் குலோப் ஜாமூன் சுடும் பதமாக இருக்கலாம்.

எடுத்தபின் ஒரு தட்டில் வைத்து அடிப்பக்கம் தட்டையான ஒரு கிண்ணத்தால் அழுத்தினால் உப்பியிருக்கும் அதிரசம் தட்டையாகிவிடும்.

எல்லா மாவையும் இப்படியே செய்ய வேண்டியதுதான்.

20150915_163847

பிறகென்ன, ஆறியதும் எடுத்து சாப்பிட்டு விடுவதோ அல்லது எடுத்து வைத்து பிறகு சாப்பிடுவதோ எல்லாமும் உங்கள் கைகளில்.

13 பதில்கள் to “தினை அதிரசம்”

  1. chollukireen Says:

    நீயும் சிறுதானியங்களுக்கு வந்து விட்டாயா? எல்லா சிறுதானியங்களும் மாவாக வேறு கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஜெனிவாவில் இருக்கும்போது பெயர்தான் புரியவில்லை. தினைமாவும்,தேனும்தான் வள்ளி முருகப்பெருமானுக்குக் கொடுத்து உபசரித்தவை. அதிரஸமெல்லாம் காம்பஸ்வைத்து வரைந்தமாதிரி நல்ல அழகு. அதிரஸத்தில் எக்ஸ்பர்ட் நீ. ருசியான அதிரஸக்குறிப்பு. பார்த்தே வயிறு நிறைந்த உணர்ச்சி. வெல்லப் பொருள்களுக்கு அலாதி ருசி. அன்புடன்

    • chitrasundar5 Says:

      காமாஷிமா,

      எங்கும் சிறுதானியங்களா இருக்கவும் நானும் தேடினேன். குதிரைவாலியும் வாங்கிவந்திருக்கிறேன். யாராவது நான்கைந்து பேர் உதவியிருந்தால் ஒவ்வொன்றும் ஒரு தினுசாக இருந்திருக்கும், நான் மட்டுமே தட்டியதால் ஒன்றுபோல் உள்ளது. ஆமாம்மா, வெல்லம் தனி ருசிதான். பாகு காயும்போதே ருசியும் வந்துவிடுகிறதே.

      எங்க அம்மாவின் செய்முறை எனக்கும் கொஞ்சம் வந்திருக்கிறது. சகோதரிதளைக் கேட்டால்கூட “அதையெல்லாம் யார் செய்யிறது ? பேசாம கடையில வாங்கிக்க வேண்டியதுதான்” என்ற பதில்தான் வருகிறது 🙂

      “தினைமாவும்,தேனும்தான் வள்ளி முருகப்பெருமானுக்குக் கொடுத்து உபசரித்தவை” ______ உழவர் சந்தைக்குக் கிளம்பியாச்சு. அங்கிருந்து தேன் வாங்கிவந்து செய்து பார்த்திடலாம். அன்புடன் சித்ரா.

  2. priyasaki Says:

    அதிரசம் செய்ததில்லை சித்ரா. எங்கூர்ல அரியதரம் என்று அரிசிமாவில் செய்வதை சொல்வோம்.தினை இங்கும் கிடைக்கும் சித்ரா.இந்த பாகுதான் கொஞ்சம் சொதப்பும்.பரவாயில்லை செய்துபார்க்கிறேன். காமாட்சியம்மா சொன்னமாதிரி அழகா இருக்கு அதிரசம்.நானும் அரிசி இடிக்கும்போது அடம் பிடித்திருக்கிறேன்.

    • chitrasundar5 Says:

      அரியதரம் __ பேரு சூப்பரா இருக்கே ப்ரியா. நான் கேளிப்பட்டதில்லை. எப்போதாவது செஞ்சா பதிவில் கொண்டு வாங்க. பாகு சரியா வந்தால் பாதி செஞ்சு முடிச்ச மாதிரிதான். தினை இப்போதான் எனக்குக் கிடைக்குது.

      நானே செஞ்சதால எல்லாம் ஒன்னுபோல வந்திருக்கு. விநாயகர் சதுர்த்திக்கு இவங்க ரெண்டு பேரையும் கொழுக்கட்டை பிடிக்கச் சொன்னதுக்கு, கொழுக்கட்டை டிசைனைத் தவிர மற்ற டிசைன்களில் விதவிதமா பிடிச்சு வைச்சாங்க, வேண்டாம்னாலும் கேக்கல, அன்று முழுவதும் அவற்றைப் பார்த்துபார்த்து எனக்கு சிரிப்புதான் :)))

  3. chollukireen Says:

    குதிரைவாலியில் சர்க்கரைப்பொங்கல்,பாயஸம்,பொங்கல் அடை எல்லாம் நன்றாக இருக்கு. நாம் தேனோடு தினைமாவு உண்க தினையை வறுத்து அரைத்த பொரிமாவாகச் செய்யணும் என்று நினைக்கிறேன். சாப்பிட்டுப்பார்த்து எனக்கும் சொல்.தேங்காய்,ஏலக்காயெல்லாம் போட்டுச் செய்து பார்க்கிறேன். எழுதும்போது இப்படி எழுதத் தோன்றியது. அன்புடன். அதிரஸம் கண்முன்னாலேயே நிற்கிறது. அன்புடன்

    • chitrasundar5 Says:

      காமாக்ஷிமா,

      நல்லவேளை, நீங்க சொன்னீங்க. இல்லன்னா ஆர்வக்கோளாறில் பச்சையா இடிச்சிருப்பேன். உங்க சத்து மாவையும் இடிக்கணும்.

      இப்போதைக்கு சாதம் மாதிரிதான் வைக்கிறேன். சுவை நல்லாருக்கு. இனிமேதான் பொங்கல், கிச்சடி எல்லாம் செய்யணும். கண்ணாலேயே சாப்பிட்டுடுங்க. அன்புடன் சித்ரா.

  4. MahiArun Says:

    ஹூம்..அதிரசத்தைப் பாத்து பெருமூச்சு விட்டுக்கிறேன். வேற வழி? 🙂
    நானும் சிலபல முறைகள் முயற்சித்தாச்சு..ஒன்று அரிசி மாவு சொதப்பும் அல்லது பாகு சொதப்பும்…கஜினி முகமது மாதிரி முயற்சி செய்துட்டு இப்ப ஒரு ப்ரேக் விட்டிருக்கேன்…
    //எங்க அம்மாவின் செய்முறை எனக்கும் கொஞ்சம் வந்திருக்கிறது// ஜூப்பர்…எனக்கு வரவே இல்லையே..கைமுறுக்கு எங்கம்மா சுத்தினா பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கும், அதிரசமும் அருமையா செய்வாங்க…!!! பார்ப்போம், யோகம் இருந்தா எனக்கும் ஒரு காலத்தில அம்மா கைப்பக்குவம் வருமோ என்னவோ!! 😉 🙂

    • chitrasundar5 Says:

      அஸ்குபுஸ்கு, இந்த தடவயும் பெரியபெரிய படைகளை எல்லாம் உருட்டி, திரட்டி, கொண்டு வந்து நிறுத்தி, செய்ய விடாம முறியடிச்சிடுவோமில்ல :)))

      கவலைப்படாதீங்க, பசங்க ‘வேணும்’னு கேட்டால் தன்னால செய்ய ஆரம்பிச்சிடுவோம். அதனால ‘லயா’வுக்கு நம்ம ஊரு நொறுக்குத் தீனிகளின் பெயரை முதலில் சொல்லிக்குடுங்க 🙂

  5. chollukireen Says:

    இடிக்கறது என்ன அர்த்தம். மிக்ஸியில் பொடிக்கிறதுதானே. இடிக்க உரல் உலக்கை வேணுமே. களைந்து சற்று உலர்த்தி பொடித்தால் இடிக்கிறது. வறுத்தோ,வறுக்காமலோ அரைத்தால் அரைக்கிறது. என்னுடையது ஸரியா. எதையுமே வறுத்து அரைத்தால்தான் கலவையுடன் அப்படியே சாப்பிட முடியும். என்னுடைய வியாக்கியானம் இது. ஸரியா?அன்புடன். மஹியை ஒரு பிடி பிடிக்கிறேன். அன்புடன்

    • chitrasundar5 Says:

      காமாக்ஷிமா,

      ஆமாம், மிக்ஸியில் பொடிப்பதுதான். அனுபவம் ஆச்சே, நீங்கள் சொல்வதுதான் சரி. ஹி ஹி பேச்சு வாக்கில் நாங்கதான் ஏதாவது சொல்லிவிடுகிறோம்.

      ஹா ஹா ஹா அதானே, ஒரு பிடி பிடிச்சிட்டு வாங்க :))))

      அன்புடன் சித்ரா.

  6. Mohamed Yasin Says:

    இன்று இணையத்தில் கேழ்வரகு கூழ் தயாரிப்பதை பற்றி தேடும் போது சகோதரியின் அறிமுகம் கிடைத்து. சில பதிவுகள் மட்டும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது. நேரம் இருக்கும் போது மற்ற பதிவுகளை படிக்க வேண்டும். நீங்கள் எங்கள் பகுதியை சேர்த்தவர் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. நாகரீகம் என்ற மமதை தொற்றிக்கொண்டதால் உதாசீனம் செய்யப்பட்ட பல உண்ணதமான மறந்து போன பண்டங்களை உங்கள் தளத்தில் கண்டது பெருமகிழ்ச்சியே… இறைவன் உங்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிப்பயனாக!!!

    • chitrasundar5 Says:

      சகோ Mohamed Yasin,

      நீங்க எங்க ஊர் பக்கமா ! மகிழ்ச்சி ! நேரம் கிடைக்கும்போது படித்துப்பாருங்கள். மறந்துபோன சில உணவுகளின் சுவைதான் செய்யத் தூண்டுகிறது.

      உங்களின் முதல் வருகைக்கும், பாராட்டுக்களுக்கும், வாத்துக்களுக்கும் நன்றி !

  7. chandravadivu Says:

    Very nice please tell paruthi pall how make it?


மறுமொழி இடுக‌