சுண்டைக்காய் சாம்பார்

20150823_165106

ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக அதுவும் இந்த ஊரில் சுண்டைக்காயைப் பார்த்ததும் வாங்கி சாம்பார் வைத்து சாப்பிட்ட சந்தோஷத்தில் பதிவாகவும் போட்டுவிட்டேன் .

சின்ன வயசுல விரும்பி சாப்பிட்ட சாம்பாராச்சே !

இந்த சாம்பாருக்கு பெருஞ்சீரகம் சேர்த்து தாளிப்பதும், புளி சேர்க்காமல் செய்வதும்தான் வித்தியாசம்.

தேவையானவை :

துவரம் பருப்பு _ 1/4 கப்
சுண்டைக்காய் _ ஒரு கை
வெங்காயம்
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
தேங்காய் பூ (விருப்பமானால்)
கொத்துமல்லி தழை
உப்பு

தாளிக்க :

எண்ணெய்
கடுகு
பெருஞ்சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம்பருப்பை வேகவிடவும்.

வெங்காயம், தக்காளியை அரிந்துகொள்ளவும்.

20150826_072932

பருப்பு நன்றாக வெந்து வரும் சமயத்தில் சுண்டைக்காயைத் தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு இரண்டிரண்டாக அரிந்து  வெந்துகொண்டிருக்கும் பருப்பில் சேர்த்து வேகவிட்டு கடைந்துகொள்ளவும்.

சாம்பாருக்கான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி தாளித்துவிட்டு வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் இதில் கடைந்து வைத்துள்ள பருப்பு & சுண்டைக்காயை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.

சாம்பார் நன்றாகக் கொதித்தபின் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி போட்டு இறக்கவும்.

20150826_160540

சாம்பார் வைத்ததும் புகைப்படம் எடுக்க மறந்துபோய் கடைசியில் எடுத்ததால் ஹி ஹி 🙂 சாம்பாரின் அளவு குறைந்திருக்கிறது.

சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சூப்பரா இருக்கும்.

சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 Comments »

2 பதில்கள் to “சுண்டைக்காய் சாம்பார்”

  1. chollukireen Says:

    சித்ரா நீ மிளகாய்த்தூள் என்று குறிப்பிட்டிருப்பது ஸாம்பார்ப்பொடி என்று நான் நினைக்கிறேன். பொதுவாக அப்படித்ததான் சொல்வது வழக்கம். இல்லை புளிசேர்க்காததால் தனி மிளகாய்ப்பொடியா? ஏனென்றால் தனியாசேர்த்தது ஸாம்பார்த்தூள். எனக்கு சுண்டைக்காய் மிகவும் பிடிக்கும். பருப்புசிலி,துவையல்,குழம்பு என்று எல்லாம் செய்வதுண்டு. தக்காளி சேர்ப்பதால் புளி அவசியமில்லையா? பயத்தம் பருப்புடன் சுண்டைக்காய் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டுக் கூட்டு செய்த பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நீ எடுத்த சுண்டைக்காய் படம் இளசாக நன்றாக உள்ளது.

    ஸாம்பாரும் செருஞ்சீரக வாஸனையுடன் இருக்கும். . பண்ணிப் பார்த்து ருசிக்கிறேன். நன்றி. அன்புடன்

    • chitrasundar5 Says:

      காமாஷிமா,

      ‘சாம்பார்தூள்’தான். ‘மிளகாய்த்தூள்’னே சொல்லி பழக்கமாகிவிட்டதால் அப்படியே எழுதிவிடுகிறேன். மளிகைசாமான் என கடையில் கொடுப்பதில் எல்லா சாமான்களும் கலந்துதான் இருக்கும்.

      சுண்டைக்காய் சாம்பார்’னாலே ஊரில் இப்படித்தான் வைப்பாங்க. புளி சேர்க்காமல், பெருஞ்சீரகம் தாளித்து, நல்லாவே இருக்கும். திடீர்னு சாம்பார் வித்தியாசமா இருக்கும்போது பிடிச்சு போகும். எதுக்கும் நீங்க கொஞ்சமா செஞ்சு பாருங்க. பிடிச்சிருந்தா மேற்கொண்டு செய்துகொள்ளலாம்.

      பிஞ்சு சுண்டைக்காய்’தான்மா. சாம்பார் வைத்ததுபோக மீதியை மோரில் ஊறவச்சு வத்தல் போட்டிருக்கேன். அடுத்த தடவ வாங்கினால் உங்க பதிவுல இருக்கற மாதிரி கண்டிப்பா பலாக்கொட்டையுடன் சேர்த்து புளிக்குழம்புதான். இப்போ பலாக்கொட்டையும் கைவசம் இருக்கு. அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌